168 ரூபாவிற்கு பெட்ரோல் – செலவு 400 ரூபாய்!
வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுடன் ஒன்று இணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது வழங்கும் சான்றிதழைப் பொறுத்தே ஏனைய நாடுகளும் எமக்கு உதவி செய்ய முன்வரும் என்பதே யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமக்கு 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் கடன் உதவி வழங்கியிருந்தன. முதலில் நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றபோது, அவர்கள் தேசிய ரீதியில் முகாமைத்துவம் வேண்டிய சில செயற்பாடுகளை எமக்குச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
உதாரணமாகக் கூறுவதாயின், முன்னர் நாம் பெட்ரோல் லீட்டர் ஒன்றை 168 ரூபாவுக்கு வழங்கியபோது, அதற்கான செலவு சுமார் 400 ரூபாவுக்கும் அதிகம்.
இந்தச் செலவைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே ஏற்றுக் கொண்டது. இது திறைசேரிக்கும் நாட்டுக்கும் சுமை. இதனால் ஏற்படுகின்ற வேறுபாடு வரி செலுத்தும் மக்களுக்கே சுமையாக இருந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நாணயநிதியம் எமக்குச் சுட்டிக்காட்டியது. நாமும் அதனைச் செய்தோம். இதனைச் செய்யாதிருப்பின் அரசாங்கத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய மீண்டும் மீண்டும் மக்கள் மீதே வரிச்சுமையை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
அத்துடன், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட, கஷ்டப்பட்ட மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அது மாத்திரமன்றி எமக்குக் கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு அவர்களின் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியிருந்தது. சகல நாடுகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கை எடுக்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.