குரங்கம்மை நோயின் அறிகுறிகள் என்ன?
ஆப்பிரிக்கா நாடுகளை ஆட்டம் காண செய்த குரங்கம்மை, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் 116 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி இருக்கிறது. இந்தியாவில் இந்த நோய் பரவி விடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது உத்தரவின்பேரில், பொது சுகாதாரத்துறை குரங்கம்மை தடுப்பு பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.
குரங்கம்மை அறிகுறி, தடுப்பு பணிகள் மற்றும் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.