எச்சரிக்கை – மக்களுக்கு ஆபத்தாகியுள்ள உணவு!
கனடாவில் இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட காளான்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காளான் வகை ஆசிய உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்துவதாக இருந்தாலும், சில சமயங்களில் அவை பச்சையாக உண்ணப்படுவதால், நோய்கள் பரவுவதற்கான அபாயம் ஏற்படுகின்றது.
இந்த எனோகி காளான் வகை தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டிலிருந்து இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காளான்களில் அதிகமானவை பக்டீரியா பாதிப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
குளிர் வெப்பநிலையிலும் உயிர் வாழும் தன்மை கொண்ட இந்த பக்டீரியா, மாசுபட்ட உணவை உட்கொண்ட 3 முதல் 70 நாட்களில் வெளிப்படும்.
அதன் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் தலைவலி போன்றவை அடங்கும்.
கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த பக்டீரியாவால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.