Post

Share this post

விநாயகி என்பது பெண் தெய்வம்?

ஆகஸ்ட் மாத இறுதியில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விநாயகர், நடன விநாயகர், கொரோனா விநாயகர், என வித்தியாசமான விநாயக வடிவங்கள் அந்தந்த சமயங்களில் பேசப்படுவதுண்டு.
ஆனால், விநாயகரைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு விநாயகியைத் தெரியும்? ஆம் , விநாயகி, கணேஷினி, பிள்ளையாரினி என்று அழைக்கப்படும் பெண் வடிவ பிள்ளையார் சிலைகளும் உண்டு. அதிகம் அறியப்படாத அல்லது பிரபலமடையாத இந்த பெண் விநாயக சிலைகள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, கையில் வளையல்களுடன், கழுத்துக்கு மேல் யானை முகத்துடன் இருக்கும், இந்த விநாயகி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றன.
ஏராளமான பெயர்களால் குறிக்கப்பட்டாலும், விநாயகி என்ற பெயர் பொதுவான பெயராக அறியப்படுகிறது. யானைத் தலையுடன் பெண் உடல் கொண்ட இந்த உருவங்கள் ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயரில் அறியப்படுகின்றன. இந்து மதத்தின் 64 யோகினிகளின் பெயர் பட்டியலில்தான், தனி கடவுளாக, ‘விநாயகி’ என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது என்று “கடவுள் விநாயகி – பெண் கணேஷா” என்ற நூலில் பி.கே.அக்ரவாலா குறிப்பிடுகிறார்.
இதே பெயரில் புத்த மத இலக்கியங்களிலும் ஒரு தெய்வம் குறிப்பிடப்படுகிறது என்று ஆய்வாளர் முண்ட்கர் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் பிரபலமாக அறியப்படுகின்றன. அதில் சில விநாயகி சிற்பங்கள் இவை:
1. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருக்கும் விநாயகி சிலை. இது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
2. ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் இருக்கும் விநாயகி சிலை. இந்த சிலையும் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
3. மத்திய பிரதேசம் மாண்டசூர் பகுதியைச் சேர்ந்த விநாயகியின் சிலை. இதன் தும்பிக்கை மற்றும் கைகள் உடைக்கப்பட்டிருப்பதையும் இந்தப் படத்தில் காண முடியும்.
இதேபோன்ற விநாயகி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் சில கோயில்களில் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன.
பின்னணி கதைகள் உண்டா?
பெரும்பாலும் ஆணாக மட்டுமே அறியப்பட்ட பிள்ளையாருக்கு பெண் வடிவம் இருக்கிறது என்றால், அதன் பின்னணியில் இருக்கும் கதைகளும் காரணங்களும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆனால், விநாயகியைப் பொறுத்தவரை தெளிவான வரையறைகளோ, காரணங்களோ இல்லை என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ. சாந்தலிங்கம்.
“பிள்ளையாரை தன் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் மரபு. அதுவும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். அதற்கு முன்பு வரை மக்களிடம் நம்பிக்கை இருந்ததே தவிர உருவங்கள் இருந்ததாக ஏதும் இதுவரை தமிழக தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்ததில்லை. இந்த விநாயகிகளைப் பொறுத்தவரை அவை தோன்றிய கதை அல்லது பின்னணி கதைகள் என எதுவும் கர்ண பரம்பரை கதைகளாகக் கூட கிடைப்பதில்லை” என்கிறார் அவர்.
மேலும், “ஆண் கடவுளர் சிலைகளுக்கு இணையான பெண் வடிவங்களை உருவாக்கி அவற்றை `சப்த கன்னியர்` என்று பட்டியலிட்டு வகைப்படுத்துவதுண்டு. பிராமினி, வைஷ்ணவி, மகேஷ்வரி, இந்திராணி என அந்தப் பட்டியல் நீளும். அதுவும் இடத்துக்கு இடம் பட்டியலும் பெயர்களும் மாறுகின்றன. பெண் வடிவங்கள் என்றாலும் அவை தனித்த தெய்வங்களாகவே கருதப்படுகின்றன. அதுபோல, விநாயகருக்கும் இப்படி ஒரு உருவம் தரப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான வாதம் என்றும் தெரிவித்தார், சொ. சாந்தலிங்கம்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழக கலாசாரத்துறை விரிவுரையாளரான பி.கே.அக்ரவாலா 1978ஆம் ஆண்டு வெளியிட்ட “GODDESS VINAYAKI THE FEMALE GANESA” என்ற நூலிலும் இதே முடிவைத்தான் வெளியிட்டுள்ளார்.
“விநாயகி அல்லது வராகி ஆகியவை விநாயகர் அல்லது வராகனின் மனைவியோ அல்லது பெண் வடிவமோ அல்ல. இந்த ஆண் கடவுளர் உருவங்களின் அடிப்படையில், அவை உருவாக்கப்பட்டிருக்கலாம். விநாயகியின் தோற்றுவாய் இது என்றோ தோற்றுவித்தவர் இவர் என்றோ எந்த தகவலையும் உறுதியாக சொல்ல முடியவில்லை” என்கிறார் அவர்.
அதே சமயம், சமண, பௌத்த மதங்களில் விநாயகி என்ற பெயருடன் குறிப்பிடப்படும் தெய்வம் ஒரு சுயாதீன கடவுளாக இருக்கிறார் என்றும், புத்தமத இலக்கியங்களில் கணபதி ஹிருதயா என்ற பெயரில் இவர் அழைக்கப்படுகிறார் என்றும் ‘விநாயகி என்னும் புதிர் – (The Enigma of Vainayaki)’ என்ற தனது ஆய்வறிக்கையில் ஆய்வாளர் பாலாஜி முண்ட்கர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி, வடிவங்களில் ஏராளமான வேற்றுமைகள் இருப்பதற்கு, உரிமையுடன் கையாளப்பட்ட வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களுமே காரணம் என்கிறார் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன்.
தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் கணபதி வேறு, தமிழ்நாட்டில் வணங்கப்படும் பிள்ளையார் வேறு என்கிறார் பண்பாட்டியல் ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ.சிவசுப்பிரமணியம்.
பிள்ளையார் மக்களோடு நெருக்கமாயிருந்த நாட்டார் தெய்வமாக இருந்தார். நாட்டார் தெய்வ வழிபாட்டு முறை போலவே, பிள்ளையாரை தண்டித்து வழிபடும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது.
மேலும், பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கென்று பிரத்யேக ஆகமங்கள் கிடையாது. காரணம், தொடக்கத்தில் அவர், சூத்திரர்களுக்கான கடவுளாக இருந்தார். பின்நாட்களில், விருப்பத்திற்கேற்ற ஆடை, அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு புதிய புதிய வடிவங்களுக்கு மாற்றப்பட்டு அவை காலப்போக்கில் வைதீக கதைகளுடன் பொருத்தப்பட்டன என்றும் தன்னுடைய பிள்ளையார் அரசியல் நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிபிசி தமிழுடன் பேசிய ஆகம அறிஞரும் தமிழ்நாடு அரசின் கோயில்கள் வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான மு.பெ.சத்தியவேல் முருகனார், “விநாயகி என்ற உருவம் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு கோவில்களில் உண்டு. ஆனால், அதன் பின்னணி கதைகள் என்று ஏதும் இல்லை. இறைமை எந்த பாலினத்துக்கும் உட்பட்டது அல்ல. அது எல்லா பாலினத்துக்கும் பொதுவானது என்பதை விளக்கவே ஆண் கடவுளர்களின் பெண் வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் இந்த விஷயத்தில் நமக்கு வேண்டிய புரிதல்.
அதுபோக, விநாயக வழிபாட்டுக்கு என்று பிரத்யேக ஆகமங்கள் ஏதும் இல்லை என்றபோதும் சிவ ஆகமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும், விநாயகரின் பெண் வடிவங்கள் குறித்து ஏதும் இல்லை. ” என்கிறார் முனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்.

Recent Posts

Leave a comment