மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் அசௌகரியங்கள், இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் வெளிப்படையாக பேசத் தடை செய்யப்பட்ட தலைப்பாக உள்ளது.
ஆனால், கேரளாவில் அதை மாற்றும் நோக்கத்தோடு ஒரு பிரசாரம் நடந்து வருகிறது. இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் மால்கள், கல்லூரிகளுக்கு மாதவிடாய் சிமுலேட்டர்களை (மாதவிடாய் வலியை செயற்கையாக ஏற்படுத்தும் கருவி) எடுத்துச் செல்கிறார்கள். மாதவிடாய் குறித்த விஷயங்களைப் பற்றிய உரையாடலை இயல்பாக்கும் முயற்சியாக ஆண்களுக்கு அந்த சிமுலேட்டரை பொருத்தி, மாதவிடாயின் வலியை அவர்கள் உணர வைக்கின்றனர்.
பிரசாரத்தின் சமீபத்திய வீடியோ ஒன்றில், ஆண்கள் மாதவிடாய் வலியால் துள்ளிக் குதித்து அலறுவதை பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அது மிகவும் வேதனையானது. நான் அதை மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை,” என்று ஒரு மாலில் மாதவிடாய் சிமுலேட்டரை முயன்று பார்த்த சமூக ஊடக பிரபலம் ஷரன் நாயர் கூறுகிறார்.
இந்த சிமுலேட்டர், கப் ஆஃப் லைஃப் என்ற திட்டத்தின் ஒரு பகுதி. இது மாதவிடாய் கப்களை இலவசமாக விநியோகிப்பதையும் மாதவிடாயைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹிபி ஈடன், மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொங்கியுள்ளார்.
பெண்களின் ஆரோக்கியம், குறிப்பாக மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள், இந்தியாவில் விவாதிக்கப்படாத தலைப்பாக உள்ளது. பல பகுதிகளில் பெண்கள் இன்னும் மாதவிடாய் காலத்தில் தூய்மையற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். சமூக மற்றும் மத நிகழ்வுகளில் இருந்தும் சமையலறையில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
நகர்ப்புறங்களில் இந்த மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிடாயை பற்றியோ அடிக்கடி ஏற்படும் கடுமையான வலியை பற்றியோ குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்களிடமே கூட விவாதிக்கத் தயங்குகிறார்கள். உலகெங்கிலும் உள்ள சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன.
இந்தியாவிலும் சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பு அளிக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் இது இன்னமும் ஒதுக்கி வைக்கப்படும் தலைப்பாகவே உள்ளது.
ஆனால், இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேரளாவில் ஒரு மாற்றத்தைத் தூண்ட முடியும் என்று இந்த பிரசாரத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் நம்புகிறார்கள்.
#feelthepain நிகழ்வை வடிவமைத்த வழக்கறிஞர் சாண்ட்ரா சன்னி, அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவிக்கவும் அதன்மீதன் அணுகுமுறைகளை மாற்றவும் இந்த சிமுலேட்டர் “எளிய வழி” என்கிறார்.
“கல்லூரி மாணவர்களிடம் மாதவிடாய் பற்றி என்ன தெரியும் என்று நேரடியாகக் கேட்டால் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் சிமுலேட்டர்களை அவர்கள் பயன்படுத்திய பிறகு, அவர்களிடம் ‘யாரிடமாவது மாதவிடாய் பற்றிப் பேசியுள்ளீர்களா, அதைப் பற்றிப் பேசத் தயங்குவதற்கு என்ன காரணம்’ போன்ற கேள்விகளைக் கேட்கையில் பதிலளிக்க முன்வருகிறார்கள்,” என்று கூறுகிறார்.
சிமுலேட்டரை ஒரே நேரத்தில் இரண்டு நபர்களிடம் பயன்படுத்த முடியும். வலியின் அளவை ஒன்றிலிருந்து 10 வரை அதிகரிக்கவும் குறைக்கவுமான வசதி அதில் உள்ளது.
அதை முயன்று பார்த்த பெண்கள், “பெரிதாக எதையும் உணரவில்லை” என்கிறார்கள். ஆனால், “நான் உட்பட இதைச் செய்து பார்த்த ஆண்கள் அனைவருமே அங்குள்ள அனைவரும் திரும்பிப் பார்க்கும்படி வலியால் துடித்தோம்,” என்கிறார் ஷரன் நாயர்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சிமுலேட்டர் வெளிப்படையான விவாதங்களைத் தூண்டியுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு தனியார் கல்லூரியில் சிமுலேட்டரை முயன்று பார்த்த இரண்டு ஆண் மாணவர்கள் அதைப் பொருத்தியவுடனேயே, வலியைப் பொறுக்க முடியாமல், ‘அதை நிறுத்துங்கள்!’ என்று உடனடியாகக் கூறினார்கள் என்று மாணவர் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜீனத் கேஎஸ் பிபிசியிடம் கூறினார்.
இது மிகவும் பொதுவான எதிர்வினை தான் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் உள்ளூர் பிரிவுக்கான இணை செயலாளாரும் கப் ஆஃப் லைஃப் பிரசாரத்தின் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அகில் மானுவேல் கூறுகிறார்.
“சிமுலேட்டர் செயற்கையாகத் தூண்டும் வலியின் அளவு 1 முதல் 10-இல், அளவு 9-இல் கூட பெண்களிடையே ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லை. ஆனால், ஆண்கள் அளவு நான்கைத் தாண்டுவதற்கே சிரமப்படுகின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.
“பல ஆண்டுகளாக இதுபோன்ற கடுமையான வலியை அனுபவிப்பது எவ்வளவு நிலைகுலைய வைக்கும் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள சிமுலேட்டர் உதவுகிறது. அவர்களைப் பொறுத்தவரை இதுவோர் இயந்திரம், வலியைத் தாங்க முடியவில்லை என்றால் அதைப் பாதியில் நிறுத்த முடியும். ஆனால், எங்களால் முடியாது,” என்கிறார் சன்னி.
இந்திய ஆண்களை மாதவிடாய் வலி சிமுலேட்டர்கள் அலற வைப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, இரண்டு லாப நோக்கமற்ற நிறுவனங்கள் வட இந்தியாவில் மாதவிடாய் குறித்துப் பேசும் விழா ஒன்றில் இதைப் பயன்படுத்தின. அப்போதிருந்து, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளில், மக்களிடையே, குறிப்பாக ஆண்களிடையே இதைப் பயன்படுத்துகிறார்கள்.
“இந்த சிமுலேட்டர், நிலவுகின்ற தடையை உடைத்து மக்களிடையே இதுகுறித்த உரையாடலை அதிகரிக்க உதவுவதற்குத்தான்” என்கிறார் மருத்துவர் மானுவேல்.
இந்த யோசனை தனித்துவமானது அல்ல. ஜூலை மாதம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மாதவிடாய் தொடர்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான சம்டேஸ், பச்சாதாபத்தை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சியாக சிமுலேட்டரை பயன்படுத்த ஆண்களை ஊக்குவித்தது. அத்தகைய நிகழ்வுகளின் டிக்டோக் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளன.
கும்பலங்கி என்ற கிராமத்தில் பெண்களுக்கு ஆயிரக்கணக்கான இலவச மாதவிடாய் கப்களை நன்கொடையாக வழங்கும் முயற்சியைத் தொடங்கிய பிறகு, மாவட்ட அளவிலான பிரசாரத்திற்கான யோசனை தோன்றியதாக ஈடன் கூறுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கேரள ஆளுநர் கும்பலங்கியை இந்தியாவின் முதல் சானிட்டரி பேட் இல்லாத கிராமமாக அறிவித்தார்.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய கப் ஆஃப் லைஃப் பிரசாரம், நான்கு மாதங்களுக்குத் தொடரும். மேலும், உலக சாதனையை உருவாக்கும் முயற்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாதவிடாய் கப்களை விநியோகிப்பது உட்பட பல செயல்பாடுகளும் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வெளிப்படையான விவாதங்களை உருவாக்குவதும் மாதவிடாய் குறித்த ஆரோக்கியமான, முற்போக்கான அணுகுமுறையை உருவாக்குவதுமே இதன் மைய நோக்கம் என்று ஈடன் கூறுகிறார்.
நாடு முழுவதும் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகள் இந்தப் பிரசாரத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகவும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தங்கள் சமுதாயங்களிலும் இந்த பிரசாரத்தை மேற்கொள்வதற்கான வழிகளைக் கேட்டதாகவும் மருத்துவர் மானுவேல் கூறினார். அதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.
“நீங்கள் சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதன் கட்டமைப்பிற்குள்ளாகவே இந்த உரையாடலை ஏற்படுத்த உதவும் பாதைகளைக் கண்டறிய வேண்டும்.”