சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளது.
அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் திங்கள்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக 30 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இது தவிர 16 பேரைக் காணவில்லை எனவும் நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் கூறின.
இதற்கிடையே, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிசுவான் மாகாணத் தலைநகா் செங்டுவில் அந்த நகர நிா்வாகம் கடுமையான கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டுகளை தொடா்ந்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.