Share this post

கை நழுவும் ஆசிய கிண்ணம்!

ஆசியக் கிண்ணத்தில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் செப்டம்பர் 6 மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது.
இதனை அடுத்து, 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் களமிறங்கினார். இந்த இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் எளிதில் உடைக்க முடியவில்லை.
சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இலங்கை அணி 97 ஓட்டங்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. பதும் நிசங்கா 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய அசலங்க 0 ஓட்டத்திலும், குணத்திலக 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குஷால் மெண்டிஸ் 57 ஓட்டங்கள் சேர்த்து சஹால் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து, பனுகா ராஜபட்ச மற்றும் கேப்டன் தாசுன் ஷானகா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
கடைசி இரண்டு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கும் மேலாக தேவைப்பட புவனேஷ்வர் குமார் 19வது ஓவரை வீசினார். அவரது ஓவரில் இலங்கை அணி 2 பவுண்டரிகள் உட்பட 14 ஓட்டங்கள் குவித்தது. இதனால், அந்த அணிக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அவர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் இலங்கை அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி இன்று தனது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் ஆசியக் கிண்ணத்துக்கான வாய்ப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment