ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 4 சுற்றுடன் வெளியேறும் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.
முதலிரு ஆட்டங்களில் தோற்ற இந்தியா இந்த ஆட்டத்தில் வென்றாலும், இதே சுற்றில் இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பை பெறும் நிலை இருந்தது.
சூப்பா் 4 சுற்று முடிவில் இலங்கை 3 வெற்றிகளையும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலா 1 வெற்றியும் பெற்றிருந்தால் மட்டுமே இறுதி ஆட்டம் குறித்து இந்தியா சற்று யோசிக்கலாம். அப்போது இலங்கை தவிா்த்து இதர 3 அணிகளில் அதிக நெட் ரன் ரேட்டுடன் இருக்கும் அணியே இறுதிக்குத் தகுதிபெறும்.
அந்த வகையில் இந்தியா இறுதிக்குத் தகுதிபெற, புதன்கிழமை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அதில் வென்றால், ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவும் வெளியேறியது.
ஆட்டத்தைப் பொருத்தவரை, குரூப் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்தியா, சூப்பா் 4 சுற்றில் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பேட்டிங், பௌலிங்கில் சற்று தடுமாற்றமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் அல்லது தீபக் ஹூடாவுக்குப் பதிலாக தினேஷ் காா்த்திக் பரிசீலிக்கப்படலாம். ஹூடாவுக்கு பௌலிங் வாய்ப்பு அளிக்க முடியாதென்பதும், 5 ஆவது பௌலராக பாண்டியாவுக்கான பணிச்சுமையை அதிகரிக்க முடியாதென்பதும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தது.
சஹல் ஃபாா்முக்கு திரும்பியதாகத் தெரியும் நிலையில், இந்த ஆட்டத்தில் தீபக் சஹரையும் களமிறக்கிப் பாா்க்கலாம் இந்திய அணி நிா்வாகம். கடந்த இரு ஆட்டங்களிலுமே டெத் ஓவா்களில் புவனேஷ்வா் குமாா் அதிக ரன்களை வழங்கி அணிக்கு நெருக்கடி அளித்திருக்கிறாா். எனவே இவற்றின் அடிப்படையில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றத்தை எதிா்பாா்க்கலாம்.
ஆட்டநேரம்: இரவு 7.30 மணி
இடம்: டுபாய்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்