கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அன்று, ஜனாதிபதி செயலகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்ததால் 2 கோடி ரூபாய்க்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் நேற்று (14) அறிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் 2 தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடியமை தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் குறித்த இழப்பை மதிப்பிடுமாறு மாவட்ட செயலாளரால் பிரதேச சபை செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீ.ஐ.டியினர் மன்றுக்கு அறிவித்தனர்.
அதேவேளை தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.