வருமானம் குறைந்தவர்களுக்கு 2,000 வீடுகள்!
சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமார் 2,000 வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகளை 3 சீன நிறுவனங்கள் நிர்மாணிக்கவுள்ளன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு, நகர மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மொரட்டுவையில் 575 வீடுகளும், கொட்டாவவில் 108 வீடுகளும் ‘சீனா தொடருந்து 25 வது பணியகக் குழுமம்’ நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதனை தவிர தெமட்டகொடையில் 586 வீடுகள் மற்றும் மஹரகமவில் 112 வீடுகள் ‘எம்.எஸ் சீன ஹார்பர் இன்ஜினியரிங்’ நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேலியகொடையில் 615 வீடுகளை ‘ஷாங்க்சி கன்ஸ்ட்ரக்ஷன் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் நிர்மாணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Courtesy: Sivaa Mayuri