OOSAI RADIO

Post

Share this post

IPL இல் 13 வயது சிறுவன்!

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.

பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார்.

இரண்டாம் நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர் இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது.

இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை.

Leave a comment

Type and hit enter