ரஹ்மான் என் தந்தை – மோகினி டே!
இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார். இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் பேஸ் ப்ளேயர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார்.
இதனைப் பலரும் தவறாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தனது உடல்நலம் சரியில்லாமல் மும்பையில் இருப்பதுதான் என்றும், ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்றும் அவர் உலகின் சிறந்த ஆண் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ரஹ்மான் குறித்து மோகினி டே வெளியிட்டுள்ள காணொளியில், “என் வாழ்க்கையில் தந்தை போன்றவர்கள் மற்றும் முன்மாதிரியான நபர்கள் சிலர் உள்ளனர்.
அவர்களில் ரஹ்மானும் ஒருவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். என் தந்தை போன்றவர் அவர். எனது தந்தையைவிட சில வயது மட்டுமே குறைவானவர் ரஹ்மான். அவரின் மகளுக்குச் சரியாக என் வயதுதான் இருக்கும்.
அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளாக உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில்தான் அவரை சந்தித்தேன்.
தயவு செய்து எங்களின் தனியுரிமையை மதிக்கவும். மிகவும் கடுமையான சூழலை வலிகளுடன் கடந்து கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.