ரணில் குழுக்களை கலைக்க அநுர அரசு தயார்!
இலங்கையில் ரணில் அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இந்த குழுக்களை நியமித்ததால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு கண்டறிந்ததை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்றக் குழுக்களின் முறையான நியமனம் தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்து அதற்கான முன்மொழிவுகளை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒரே மாதிரியான விடயங்களுக்கு பல துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற விடயங்களை ஒரு குழுவின் கீழ் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய பல துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை ஒரே குழுவின் கீழ் கொண்டுவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.