OOSAI RADIO

Post

Share this post

12 வருடங்களின் பின் மீண்டும் கோலி! (Video)

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்கு பின்னர், உள்ளூர் கிரிக்கட் போட்டி ஒன்றில் பங்கேற்ற நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை அருண் ஜெட்லி மைதானத்தில் ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ணப் போட்டியில் 36 வயதான கோலி டெல்லி அணிக்காக களமிறங்கினார்.

அவுஸ்திரேலியாவிடம் இந்தியா 3-1 என்ற கணக்கில் போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இழந்த பிறகு, தேசிய அணி வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற தேசிய கிரிக்கெட் சபையின் உத்தரவைத் தொடர்ந்தே கோலி உள்ளூர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, அண்மைய ஆண்டுகளில் நிலைத்தன்மைக்காக போராடி வரும் நிலையிலேயே உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய அணியின் மத்திய நிலை துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வருகிறார் ஆனால் அவரது சிவப்பு பந்து சராசரி அண்மைய ஆண்டுகளில் சரிந்துள்ளது.

2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் சராசரி 54.97 ஆக இருந்தது, ஆனால் 2020 முதல், அது 30.72 ஆகக் குறைந்துள்ளது. அத்துடன் அவரது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 22.47 சராசரியே வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லிப் போட்டிக்கு முன்னதாக பயிற்சிக்காக டெல்லி அணியுடன் கோலி இணைவார் என்ற செய்தி பரவியதை அடுத்து, கடந்த செவ்வாயன்று மைதானத்திற்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அதேநேரம் நேற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோலியின் துடுப்பாட்டத்தை பார்ப்பதற்காக மைதானத்துக்கு வந்திருந்தனர்.

Leave a comment

Type and hit enter