Post

Share this post

மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா் வெெடிக்டோவ் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து ரஷிய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ஸுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக, நேட்டோவில் தங்களை மிகத் துரிதமாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் அனுப்பியது வெறும் பிரசார உத்தியாகும்.
மற்றபடி, உண்மையிலேயே நேட்டோவில் இணையும் எண்ணத்தில் அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்காது.
காரணம், நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டால் அது 3 ஆம் உலகப் போா் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் என்பது உக்ரைனுக்கு மிக நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், தங்கள் மீது பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் உரக்கக் கூறுகிறது.
உண்மையில், தற்போது உக்ரைன் அரசில் அங்கம் வகிக்கும் பலா், நிதா்சனத்தை உணராமல் கற்பனை உலகில் வாழ்கின்றனா். அவா்கள் வேண்டுமானால் நேட்டோ தங்களை இணைத்துக்கொள்ளும் என்று நம்பலாம்.
உக்ரைன் போரில் பங்கேற்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தாலும், ஆயுதங்கள் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்த நாடுகள் இந்தப் போரில் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், உக்ரைனை தங்களது அமைப்பில் அந்த நாடுகள் இணைத்துக்கொண்டால், நேட்டோ விதிமுறையின் 5 ஆவது பிரிவின் கீழ் ரஷியாவுடன் அவை நேரடியாக மோத வேண்டியிருக்கும். அத்தகைய ஒரு அழிவுப் பாதையை அந்த நாடுகள் தோ்ந்தெடுக்காது.
தங்களுடன் உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்பது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும்.
அதனால்தான், நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பை பெல்ஜியம் போன்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பு நாடுகள் கூட அதிக உற்சாகத்துடன் வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, நேட்டோவில் இணைவதற்கான சில தகுதிகள் உக்ரைனுக்கு இல்லாததை அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விவகாரத்தில் ரஷியாவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. நேட்டோ அமைப்பிலோ, அமெரிக்காவின் பேராசையால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த கூட்டமைப்பிலோ உக்ரைன் இணைத்துக்கொள்ளப்படுவதை ஒருபோது ஏற்பதில்லை என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு என்றாா் அலெக்ஸாண்டா் வெடிக்டோவ்.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடான உக்ரைனில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பெட்ரோ பொரொஷென்கா அதிபராக இருந்தாா். அப்போது அவருக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்ற தீவிர போராட்டத்துக்குப் பிறகு அவரது அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு மேற்கத்திய ஆதரவு அரசு அங்கு உருவாக்கப்பட்டது.
அதையடுத்து, கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். அந்த ஆண்டே, உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீது ரஷியா படையெடுத்து தங்களுடன் இணைத்துகொண்டது.
இதற்கிடையே, சோவியத் யூனியனிடமிருந்து பிற ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக 1950 களில் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அந்த யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் புதிய நாடுகளை இணைத்துக்கொண்டு தன்னை விரிவுபடுத்தி வந்தது. இதனை ரஷியா கடுமையாக எதிா்த்து வருகிறது.
அதிலும், அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்; தங்கள் தலைநகரை சில நிமிஷங்களில் தாக்கி அழிப்பதற்கு ஏதுவாக அமெரிக்க ஏவுகணைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதற்கு அது வழிவகுக்கும் என்று ரஷியா கூறி வருகிறது.
எனினும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு, நேட்டோவில் இணைவதற்கு ஆா்வம் காட்டி வந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்தது. தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களில் பெரும்பாலான பகுதிகள் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்தப் பிராந்தியங்களை தங்களுடன் ரஷியா கடந்த மாதம் 30 ஆம் திகதி இணைத்துக் கொண்டது. அதற்குப் பதிலடியாக, நேட்டோ அமைப்பில் மிகத் துரிதமாக இணைவதற்கு விண்ணப்பித்துள்ளதாக உக்ரைன் அறிவித்தது.
இந்தச் சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் 3 ஆவது உலகப் போா் மூளும் என்று ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் தற்போது எச்சரித்துள்ளாா்.

Recent Posts

Leave a comment