10% போனஸ் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத் தொகை வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசாணை:
கொரோனா பேரிடரால், அரசின் வருவாயில் சிக்கல்கள், பொதுத் துறை நிறுவனங்களின் வணிகத்தில் 2021-22 ஆம் ஆண்டுகளில் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டன. கொரோனா காரணமாக கடந்தாண்டு மே 10 முதல் ஜூலை 5 வரை முழு முடக்கமும், தொடா்ந்து நிகழாண்டு ஜன. 31 வரை பகுதியளவு முடக்கமும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்திலும், நிறுவனங்களுக்கான வருவாய் குறைந்திருந்த போதும், போக்குவரத்துக் கழகங்கள் உள்பட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் பணியாளா்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் 57 நாள்கள் முழு பொது முடக்க கட்டுப்பாடுகளால் பேருந்துகள் இயங்காத நிலையிலும், போக்குவரத்துக் கழகங்கள் வங்கிகள், நிதிநிறுவனங்களில் கடன் பெற்று, பெரிய அளவில் வட்டி இழப்பு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், பணியாளா்களுக்கு சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்கின.
இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியா்களுக்கு இந்த 2022-23 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மிகை வருவாய் பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் போனஸ் சட்டத்தின் படி, சி மற்றும் டி பிரிவு பணியாளா்கள், ஊழியா்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை என 10 சதவீதத்துக்கு மிகாத தொகை வழங்கப்பட வேண்டும். இவா்களுக்கான அதிகபட்ச ஊதிய தகுதியானது ரூ. 21 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த ஊதிய தகுதிக்குள் ஊதியம் பெற்று, கடந்தாண்டில் பகுதியளவு நாள்கள் பணியாற்றிய ஊழியா்களுக்கும் அதற்கேற்ப போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத போனஸ் அறிவிப்பால், பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த 3.58 லட்சம் நிரந்தர ஊழியா்கள் பயன்பெறுவா். அவா்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை, பதவியின் நிலைகளுக்கு ஏற்ப போனஸ் தொகை கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை, குடிநீா் வழங்கல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த போனஸ் அறிவிப்பால், பொதுத் துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியா்களாக உள்ள சுமாா் 3.58 லட்சம் போ் பயன்பெறுவா். மேலும், தற்காலிக பணியாளா்களுக்கும் பொதுத் துறையின் நிதி நிலைக்கேற்ப போனஸ் தொகைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவுகள் ஒவ்வொரு பொதுத்துறை சாா்பில் தனித்தனியாக வெளியிடப்படும் என தெரிவித்தனா்.