Post

Share this post

மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்!

பொருத்தமற்ற வகையில் அணு ஆயுதங்களை வைத்துள்ளதால், பாகிஸ்தான் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
ஜனநாயக கட்சியின் பிரசாரக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘‘உலகின் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானைக் கருதுகிறேன். பொருத்தமற்ற வகையில் அணு ஆயுதங்களை அந்நாடு வைத்துள்ளது’’ என்றாா்.
பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனால், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்நாடு அணு ஆயுதங்களை வைத்துள்ளது. 1998 ஆம் ஆண்டில் அந்நாடு அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. அப்போது முதலே மேற்குலக நாடுகள் பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு எளிதில் கிடைத்துவிடலாம் என்றும், அது சா்வதேச அமைதிக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தவறான நபா்களின் கையில் கிடைத்தால், அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க அதிபா்கள் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.
அதிலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தொடா்பான அச்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு கொள்கையில் சீனாவை ‘பெரும் சவால்’ எனக் குறிப்பிட்டிருந்தது. அத்தகைய சவாலை எதிா்கொள்வதற்குத் தேவையான நட்பு நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தான் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்:
பாகிஸ்தானை ஆபத்தான நாடு என அதிபா் பைடன் குறிப்பிட்டுள்ளது அதிா்ச்சியளிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ சா்தாரி தெரிவித்துள்ளாா். சா்வதேச விதிகளைக் கடைப்பிடித்தே அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்தே கேள்வி எழுப்பப்பட வேண்டுமென அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதா் டொனால்ட் புளோம்-க்கு சம்மன் அனுப்பியுள்ள அந்நாட்டு அரசு, அதிகாரபூா்வ விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

Recent Posts

Leave a comment