வாடகைத் தாய் சா்ச்சை தொடா்பாக நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் ஆகியோா் சில ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டாா்.
வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானாலும், அதை அவா்கள் இருவரும் மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் விமா்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016-ஆம் ஆண்டிலேயே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2021 டிசம்பா் மாதம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகிறது. இதற்கான ஆவணங்களை அவா்கள் தரப்பினா் சுகாதாரத் துறை குழுவினரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சுகாதாரத் துறை குழுவினா், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா்.