Post

Share this post

ஜெயலலிதா மரணம் – திடுக்கிடும் உண்மைகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.
மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, செப்டம்பர் 22 இரவு சுயநினைவு இல்லாத நிலையில் போயஸ் தோட்டம் இல்லத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரையும் மற்றும் அவரின் பொதுவான உடல்நிலை குறித்தும் ஆணையம் விரிவாக விசாரித்தது.
ஜெயலலிதா வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறையில் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கையை அடையும்போது மயங்கி விழுந்தார். சசிகலாவும், உறவினரான மருத்துவர் கே.எஸ்.சிவகுமாரும் தாங்கிப் பிடித்தனர். சிறிதும் தாமதம் செய்யாமல் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்த விவகாரத்தில் சசிகலா உள்ளிட்ட நபர்களின் நடவடிக்கைகளில் அசாதாரண அல்லது இயற்கைக்கு மாறான செயல் எதையும் ஆணையம் கண்டறியவில்லை.
மருத்துவ பரிசோதனையில் “செப்சிஸ்´ எனப்படும் கிருமித் தொற்று அவருக்கு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதாவது சிறுநீர்ப் பாதையில் அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி இதயத்தில் திசு வளர்ச்சி மற்றும் துளை இருந்தது தெரியவந்தது. மேலும், நுரையீரலில் நீர்கோர்த்து வீக்கம் ஏற்பட்டிருந்ததையும் மருத்துவக் குழு கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவின் இதயம் – நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமின் ஷர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். அதுகுறித்து அவரிடம் எடுத்துரைத்து ஒப்புதல் பெற்றார் என சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அறுவை சிகிச்சையை தள்ளிப் போட தந்திரம்:
ஆனால், இதற்கிடையே, பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் சில வாய்மொழி பரிந்துரைகளைக் காரணமாகக் காட்டி அறுவை சிகிச்சையை தள்ளிப்போட வைக்க நுரையீரல் மருத்துவர் பாபு ஆபிரகாம் சில தந்திரங்களைச் செய்தார் என ஆணையம் முடிவு செய்கிறது. அறுவை சிகிச்சை முடிவை மாற்ற அமெரிக்க மருத்துவருக்கு மட்டுமின்றி சசிகலாவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
இது குறித்து டாக்டர் பாபு ஆபிரகாமிடம் விசாரித்ததில் அமெரிக்க டாக்டர் சமின் ஷர்மாவை சசிகலாவின் உறவினர்கள்தான் அழைத்து வந்ததாகக் கூறினார். இதய அறுவை சிகிச்சையை தவிர்க்க சசிகலாவால் சில உத்திகள் கையாளப்பட்டன என்பது ஆணையத்தின் அனுமானம்.
ஓபிஎஸ் அனைத்தையும் அறிவார்:
அந்த நேரத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால் அனைத்தையும் அறிந்திருந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்கள், ஊடகங்களின் வதந்திகளுக்காகத்தான் ஆணையத்தின் நியமனம் தேவைப்பட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் கூறினார்.
2016, டிசம்பர் 5 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாட்சியங்கள் கூறியதன் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016, டிசம்பர் 4 ஆம் திகதி பிற்பகல் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும்.
குற்றம் செய்தவர்கள்: விசாரணையின் அடிப்படையில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், சுகாதார அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், சுகாதாரச் செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
அப்பல்லோ மருத்துவர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் பாபு ஆபிரகாம் ஆகியோர் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து ஆஞ்சியோ, இதய அறுவை சிகிச்சை பெறுவதற்கான கருத்துகளைப் பெற்றாலும் ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தால் சட்டவிரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். அதனால், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அப்போதைய தலைமைச் செயலர் ராம மோகன ராவ் பல்வேறு நாள்களில் கடிதம் வாயிலாக நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை.
நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும். குறிப்பாக, முதல்வரின் உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார். எனவே, அவர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்து செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.
இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்கக் கூட்டத்தை நடத்தியபோதிலும் முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment