Post

Share this post

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

உலகக் கிண்ண போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பிரதான எதிரணியான பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.
கடைசியாக இவ்விரு அணிகளும், கடந்த உலகக் கிண்ண போட்டியில் இதேபோல் தங்களின் முதல் ஆட்டத்தில் சந்தித்துக் கொண்டன. அதில் பாகிஸ்தான் வென்றது. அதுவரை ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை அப்போது இழந்தது இந்தியா.
எனவே இப்போது மீண்டும் பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் இருக்கிறது இந்தியா. இதர ஆட்டங்களைப் போலத்தான் இந்த ஆட்டமும் என பரஸ்பரம் இரு அணிகளின் தலைவர்களும் கூறினாலும், இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போதுமே பிரதானமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் குவிய இருக்கும் நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆட்டத்தைப் பொருத்தவரையில், பாகிஸ்தானின் பிரதான பெளலர் ஷாஹீன் அஃப்ரிதியை இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் பவர் பிளேயில் எவ்வாறு எதிர்கொள்ள இருக்கின்றனர் என்பதைப் பொருத்தே ஆட்டத்தின் போக்கு இருக்கும். கடந்த உலகக் கிண்ணத்தில் இந்த 3 விக்கெட்டுகளும் அவரது பெளலிங்கில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆடுகளம், பெளலர்கள் என எந்தவொரு காரணிக்காகவும் தனது அதிரடி ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாத சூர்யகுமார் யாதவைக் கொண்டு அஃப்ரிதிக்கு பதிலடி கொடுக்க ரோஹித் முனையலாம். லோயர் மிடில் ஆர்டரில் பந்த், கார்த்திக் இடையே போட்டி இருக்கிறது.
அணியில் 3 ஸ்பின்னர்கள் இருந்தாலும், வானிலை காரணமாக ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக மாறும் பட்சத்தில் ஒரு ஸ்பின்னருக்கே பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும். பாகிஸ்தானில் 3 இடதுகை பேட்டர்கள் இருப்பதால் நிச்சயம் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
ரோஹித் டாஸ் வெல்லும் பட்சத்தில் சேஸிங்கை தேர்வு செய்வார் எனத் தெரிகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக மெல்போர்ன் மைதானத்தில் மோதவுள்ளன.

Leave a comment