Post

Share this post

9 ஓவர்களில் உலகக் கிண்ண போட்டி!

டி20 உலகக் கிண்ணத்தில் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றின் திங்கள்கிழமை 2 வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே அணிகள் ஹோபார்டில் விளையாடுகின்றன. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நிறைய நேரம் வீணானதால், ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள், 4 பந்துவீச்சாளர்கள் அதிகபட்சம் தலா 2 ஓவர்கள் வீசலாம் என விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ஓட்டங்கள் எடுத்தது.
80 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தலைவர் தெம்பா பவுமா களமிறங்கினர்.
முதல் ஓவரை தெண்டாய் சகாப்வா வீசினார். முதல் பந்திலிருந்தே ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கிய டி காக், முதல் ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 23 ஓட்டங்கள் விளாசினார்.
இரண்டாவது ஓவரின்போதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 7 ஓவரில் 64 ஓட்டங்கள் என மாற்றியமைக்கப்பட்டது.
மழைக்குப் பிறகு வீசப்பட்ட 2 வது ஓவரின் மீதமுள்ள 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசினார் டி காக். 3 வது ஓவரை சிக்கந்தர் ராசா சிறப்பாக வீசி பவுண்டரிகள் எதுவும் கொடுக்கவில்லை. எனினும், தென்னாப்பிரிக்க அணி அந்த ஓவரில் 11 ஓட்டங்கள் சேர்த்தது.
ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு அப்போது 13 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.
எனினும், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால், சிம்பாப்வே அணி நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பியது. வெறும் 18 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசிய டி காக்கின் அதிரடியும் தென்னாப்பிரிக்காவுக்கு கைகொடுக்காமல் போனது.
இதன்மூலம், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளன.

Recent Posts

Leave a comment