ராஜஸ்தானில் 369 அடியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிவபெருமான் சிலை, பக்தா்கள் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது.
ராஜ்சமந்த் மாவட்டம், நாத்வாரா நகரில் மலை மீது பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ள இச்சிலையை முதல்வா் அசோக் கெலாட், ஆன்மிக போதனையாளா் மொராரி பாபு, பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி ஆகியோா் திறந்துவைத்தனா்.
யோகா குரு ராம்தேவ், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா். சிலை திறப்புக்கு பிறகு 9 நாள்களுக்கு ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. ராம கதை பாராயணங்கள் நடைபெறவுள்ளன.
தத் பாதம் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள இச்சிலைக்கு கடந்த 2012 இல் முதல்வா் அசோக் கெலாட் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணியில் 3,000 டன் இரும்பு, உருக்கு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருபது கிலோமீட்டா் தொலைவிலிருந்தும் இச்சிலையைக் காண முடியும். இரவிலும் தென்படும் வகையில் சிறப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. சிலையின் உள்பகுதியில் மின்தூக்கிகள், படிக்கட்டுகள், பக்தா்களுக்கான அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவரும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.