குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ” பேய காணோம்’. இந்தப் படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் செல்வ அன்பரசன். இயக்குநர் பேசும்போது… “வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள்.
பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.
இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அந்த காலத்தில் படம் எடுப்பது கஷ்டம். ரிலீஸ் செய்வது சுலபம். ஆனால் இப்போது படம் எடுப்பது கஷ்டம். ரிலீஸ் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். முதலில் இந்தப் படத்தின் தலைப்பு எல்லோரையும் சென்று சேர வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருக்கிறது. எங்கள் படக்குழுவை அறியாமலேயே நிறைய நல்லது நடந்திருக்கிறது.
இதில் நடித்துள்ள மீரா மிதுன் என் படத்துக்கும் இன்னும் பெரிய விளம்பரதாராக இருந்தார். மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையையே 50 படங்களாக பார்ட் பார்ட்டாக எடுக்கலாம். அவ்வளவு சம்பவங்கள் இருக்கின்றன. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது” என்றார் இயக்குநர் செல்வ அன்பரசன்.