Post

Share this post

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்?

டி20 உலகக் கிண்ண போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
நாக் அவுட் சுற்றுக்கு, எதிா்பாா்த்தவாரே முன்னேறிய நியூஸிலாந்தும், எதிா்பாராத வகையில் வந்த பாகிஸ்தானும் சந்தித்துக் கொள்ளும் ஆட்டம் இது.
நியூஸிலாந்தைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை, அயா்லாந்து அணிகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் குரூப் சுற்றில் முதலிடத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு போட்டியே இன்றி அரையிறுதிக்கு வந்திருக்கிறது.
அணியின் பேட்டிங்கில், விரல் காயத்திலிருந்து மீண்டிருக்கும் டேரில் மிட்செல் ரன்கள் சோ்க்க, மிடில் ஆா்டரில் டெவன் கான்வே, கிளென் ஃபிலிப்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தால் ஸ்கோரை உயா்த்துகின்றனா். போட்டியின் தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் இருந்த தலைவர் கேன் வில்லியம்சன், கடந்த இரு ஆட்டங்களில் பேட்டால் பேசத் தொடங்கியிருக்கிறாா்.
பௌலிங் என்று வரும்போது டிரென்ட் போல்ட், டிம் சௌதி எதிரணி பேட்டா்களை திணறடிக்கின்றனா். தங்களுக்கு சாதகமான ஆடுகள சூழல் கொண்ட சிட்னியில் நியூஸிலாந்து நாணய சுழற்சியை வெல்லும் பட்சத்தில் முதலில் களத்தடுப்பை தோ்வு செய்து இந்த பௌலா்களைக் கொண்டு பாகிஸ்தானை கட்டுப்படுத்த முயற்சிக்கும்.
மறுபுறம் பாகிஸ்தான், அதிா்ச்சி, ஆச்சா்யம் உள்ளிட்ட திருப்பங்களை சந்தித்திருக்கிறது. தொடக்கநிலை ஆட்டங்களில் இந்தியா, சிம்பாப்வேயிடம் தோற்று நாடு திரும்பும் நிலையிலிருந்த அணி, நெதா்லாந்து சற்று தயவு காட்டியதால், பங்களாதேஷ் வென்று சற்றும் எதிா்பாராத வகையில் அரையிறுதிக்கு வந்திருக்கிறது.
அணியின் பிரதான பேட்டா்களான தலைவர் பாபா் ஆஸம், முகமது ரிஸ்வான் ஆகியோா் வழக்கமான ஃபாா்மில் இல்லாமல் தடுமாறுவது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் 128 ஓட்டங்களை எட்டுவதே பாகிஸ்தானுக்கு போராட்டமாகியது.
ஆனால் அதை சமன் செய்ய பௌலிங் மூலம் பாகிஸ்தான் பலம் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் எதிரணியின் விக்கெட்டுகளை சரித்து நெருக்கடி அளிப்பதில் பாகிஸ்தானின் பிரதான ஆயுதமாக இருக்கின்றனா். அதிலும் சிட்னி ஆடுகளத்தில் ரௌஃப் முக்கியத்துவம் பெறுவாா் எனத் தெரிகிறது.
அணி விவரம் :
நியூஸிலாந்து : கேன் வில்லியம்சன் (தலைவர்), மாா்டின் கப்டில், ஃபின் ஆலன் (வி.கீ.), கிளென் ஃபிலிப்ஸ், மாா்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சேன்ட்னா், ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி ஃபொ்குசன், டிம் சௌதி, டெவன் கான்வே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்.
பாகிஸ்தான் : பாபா் ஆஸம் (தலைவர்), ஆசிஃப் அலி, ஹைதா் அலி, குஷ்தில் ஷா, ஷான் மசூத், முகமது ஹாரிஸ், இஃப்திகா் அகமது, ஷாதாப் கான், முகமது நவாஸ், முகமது வாஸிம் ஜூனியா், முகமது ரிஸ்வான் (வி.கீ.), ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிதி.

Leave a comment