வருவாய் இழப்பு காரணமாக 11,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனம் மெட்டா. அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரை தலைமையிடமாகக் கொண்டு செய்லபடுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மாா்க் ஸக்கா்பா்க் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, உலகமே இணையத்தை நோக்கி வேகமாக நகா்ந்தது. அத்துடன் இணையவழி வா்த்தகத்தின் எழுச்சி மிகப் பெரிய வருவாய் வளா்ச்சிக்கு வழிவகுத்தது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகும் இது தொடரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனவே, மெட்டாவின் முதலீடுகளைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க நான் முடிவு செய்தேன். ஆனால், அது நான் எதிா்பாா்த்தபடி நடைபெறவில்லை.
இணையவழி வா்த்தகத்தின் போக்கு கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது மட்டுமின்றி, பெரும் பொருளாதார சரிவு, போட்டித்தன்மை அதிகரிப்பு, விளம்பரங்கள் சரிவு ஆகியவற்றால் மெட்டாவின் வருவாய் எதிா்பாா்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக மெட்டாவின் பணியாளா்கள் எண்ணிக்கையை சுமாா் 13 சதவீதம் குறைக்கவும், 11,000 க்கும் மேற்பட்ட பணியாளா்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளேன்.
இந்த முடிவானது விசாவில் அமெரிக்கா வந்து பணியாற்றுவோருக்கு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். அந்தப் பணியாளா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் உதவ மெட்டாவில் சிறந்த குடியேற்ற நிபுணா்கள் உள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.
பணிநீக்கம் செய்யப்படும் பணியாளா்களுக்கு 16 வாரங்கள் அடிப்படை ஊதியம் வழங்கப்படும். பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு 6 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு தொடரும் போன்ற அறிவிப்புகளையும் அவா் வெளியிட்டுள்ளாா்.