Post

Share this post

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இது?

டி20 உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணியின் தோல்விக்குப் பந்துவீச்சாளர்கள் மீது குறை கூறியுள்ளார் ரோஹித் சர்மா.
அடிலெய்டில் நடைபெற்ற 2 வது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து தலைவர் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் விளையாடினார். இங்கிலாந்து அணியில் மலான், மார்க் வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. பில் சால்ட், ஜோர்டன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார்கள்.
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ஓட்டங்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ஓட்டங்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஞாயிறன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண இறுதிச்சுற்றில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
இன்று நாங்கள் விளையாடிய விதம் வேதனையளிக்கிறது. பேட்டிங்கில் கடைசியில் போராடி நல்ல ஸ்கோரை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சரியாக இல்லை. ஓர் அணி 16 ஓவர்களில் இந்த இலக்கை விரட்டும் அளவுக்கான ஆடுகளமல்ல இது. இன்று நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. நாக் அவுட் ஆட்டங்களில் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்வது மிக முக்கியம். அதை எப்படி எதிர்கொள்வது என யாருக்கும் கற்றுத் தர முடியாது. தனிநபரைப் பொறுத்த விஷயம் இது. ஐபிஎல் போட்டியில் நெருக்கடியான தருணங்களை நன்கு எதிர்கொள்கிறார்கள். பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் நன்கு விளையாடினார்கள். நாங்கள் நன்குப் பந்துவீசியும் பேட்டர்கள் ரன்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்றார்.

Leave a comment