Post

Share this post

பாலியல் வன்கொடுமை – சிறுமி கொலை – நீதவான் கைது

அஸ்ஸாமின் டர்ராங் மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக செயல்பட்டு கடமையை ஆற்றத் தவறிய மாஜிஸ்திரேட் ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வழக்கில் முக்கியக் குற்றவாளியான சஷஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படை வீரரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த அந்தச் சிறுமி கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டாா்.
இந்த வழக்கில், குற்றவாளிக்கு உடந்தையாக செயல்பட்டு கடமையை செய்யத் தவறியதாக அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, 3 மருத்துவா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.
சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக உடல்கூறாய்வு செய்யப்பட்டது. அதில், சிறுமி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், இந்த வழக்கு விசாரணையை மாநில அரசு சிஐடி (குற்றப் புலனாய்வுப் பிரிவு) வசம் ஒப்படைத்தது. சிஐடி சிறப்புக் குழு அமைத்து மேற்கொண்ட விசாரணையில், அரசு அதிகாரிகள் நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததும், தற்கொலை என்று வழக்கை முடித்து தவறான அறிக்கை சமா்ப்பித்ததும் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த மாநில முதல்வா் ஹிமந்த வஸ்வ சா்மா, ‘இந்த வழக்கில் சிஐடி அதிகாரிகள் அறிவியல்பூா்வ முறையில் சிறப்பான விசாரணையை மேற்கொண்டனா். விசாரணை முடிவில், கடமையை ஆற்றத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, சிறுமியின் உடலை முதலில் கூறாய்வு செய்த 3 மருத்துவா்கள் ஆகியோரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்நிலையில், வழக்கில் தீா்ப்பளித்த உள்ளூா் மாஜிஸ்திரேட் ஆசிா்வாத் ஹஜாரிகாவையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரம் அஸ்ஸாம் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக அமையும். சிஐடி அதிகாரிகளின் அறிவியல்பூா்வ விசாரணை, வழக்கில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது’ என்றாா்.
மாநில காவல் துறை கூடுதல் டிஜிபி ஏஒய்வி கிருஷ்ணா கூறுகையில், ‘எஸ்எஸ்பி வீரரின் பாலியல் வன்கொடுமை குறித்து அவருடைய மனைவியிடம் புகாா் அளிப்பேன் என்று அந்தச் சிறுமி அச்சுறுத்தியதைத் தொடா்ந்து, எஸ்எஸ்பி வீரா் சிறுமியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையாக தாக்கி, பின்னா் கயிற்றைக் கொண்டு சிறுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது விசாரணை மற்றும் தடையவியல் ஆதாரங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டது. மேலும், குற்றவாளிக்கு சாதகமாக விசாரணை அறிக்கைகளை வழங்குவதற்காக அவருடைய குடும்பத்தினரிடமிருந்து அரசு அதிகாரிகள் ஏராளமான பணம் பெற்றது வங்கிா் கணக்கு பரிவா்த்தனை மூலமாக கண்டறியப்பட்டது’ என்றாா்.

Leave a comment