Post

Share this post

நடிகர் வீட்டில் 200 பவுன் நகை, பணம் கொள்ளை!

சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள திரைப்பட நடிகர் ஆர்.கே வீட்டில் 200 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் திரைப்பட நடிகர் ஆர்.கே. இவருக்கு ராஜி (53) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணா வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டதால் வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பகுதி வழியே நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர், வீட்டில் தனியாக இருந்த ஆர்.கே. மனைவி ராஜியை கட்டிப்போட்டிவிட்டு பீரோவில் இருந்த 200 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அருகில் இருந்த மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த நந்தம்பாக்கம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நடிகர் ஆர்.கே வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த வாட்ச்மேன் ரமேஷ் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆர்.கே அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும், வெளிமாநிலத்திற்கு தப்பிச் செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு கொள்ளையர்களின் புகைப்படத்தை அனுப்பி பிடிக்குமாறும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்.கே.

Leave a comment