வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவா் அபிஜித் போஸ், மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவா் ராஜீவ் அகா்வால் ஆகியோா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனை அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
வருவாய் இழப்பு காரணமாக சா்வதேச அளவில் 11,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் அறிவித்த நிலையில், இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உயா்நிலைப் பொறுப்புகளில் இருந்து பணியாளா் குறைப்பு நடவடிக்கையை மெட்டா தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவா் வில் கேட்ச்சாா்ட் வெளியிட்ட அறிவிப்பில், ‘வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவின் முதல் தலைவராக இருந்து சிறப்பான பங்களிப்பைத் தந்த அபிஜித் போஸுக்கு நன்றி. இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடா்ந்து சிறப்பாக செயல்படும். வாட்ஸ்ஆப் இந்தியாவின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குநராக உள்ள சிவானந்த் துக்ரால் இனி மெட்டாவின் அனைத்து துணை நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவராக இருப்பாா்’ என்று கூறியுள்ளாா்.
கடந்த 2019 பிப்ரவரியில்தான் அபிஜித் போஸ் ‘வாட்ஸ்ஆப் இந்தியா’ தலைவராக பொறுப்பேற்றாா். வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் இருந்து விலகுவது தொடா்பாக சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்த வாரம் வாட்ஸ்ஆப்-பில் பணியாற்றும் நமது குழுவினருக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொழில் உலகில் இணைவேன்’ என்று கூறியுள்ளாா்.