Post

Share this post

சர்ச்சைகளை ஊதித் தள்ளிய ‘லேடி சூப்பர் ஸ்டார்’

திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு முக்கியமான ஒன்று விளம்பரம். சிலர் விளம்பரங்களை தேடிச் செல்வர். சிலர் விளம்பரங்களால் தேடப்படுவர். ஒரு சிலர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ செய்திகளுக்காகவே ஓடிக் கொண்டிருப்பர். ஆனால் இது எதுவுமே இல்லாமல் தன்னை சுற்றி அடுக்கி வைக்கப்பட்ட செய்திகளின் மீதும், சர்ச்சைகளின் மீதும் ஏறி ஏறி உச்சம் தொட்ட ஒருவர் உண்டென்றால் அது நடிகை நயன்தாராதான்.
இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளின் முன்னணி நடிகர்கள் என யாரெல்லாம் அடையாளம் காட்டப்படுகின்றனரோ அத்தனை பேருடனும் பணியாற்றிய பெருமை, கதாநாயகனை சுற்றி ஓடி வந்த திரையுலகை கதாநாயகி பக்கம் ஓடவிட்ட சாதனை, சினிமா தொடக்கி வைத்த சர்ச்சைகள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்தபோதும் அசால்ட்டாக தட்டித் தூக்கிய முதிர்ச்சி என அவரது வயதுக்கு மீறிய அனைத்தையும் சமாளித்து இன்றைக்கு உச்சம் தொட்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
பொதுவாக புதுமுக நடிகைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் உச்ச நடிகருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துவிடாது. மலையாளத்தில் அறிமுகமான மனசினகாரே திரைப்படத்திலேயே முன்னணி நடிகர் ஜெயராமுடன் இணைந்த நயன்தாரா அதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்படமான ஐயாவில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியானார். இயக்குநர் ஹரி இயக்கிய இந்தத் திரைப்படம் ஹிட் அடிக்க அவரை அள்ளி தூக்கிக் கொண்டது கோலிவுட் சினிமா. சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்தவர், அவருடனே அதற்குப்பின் 2 படங்களில் பணியாற்றி மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்தார்.
வில்லு திரைப்படத்தில் நடிகர் விஜய், பில்லாவில் நடிகர் அஜித், கஜினியில் நடிகர் சூர்யா, யாரடி நீ மோகினியில் தனுஷ், இருமுகனில் நடிகர் விக்ரம், வல்லவனில் சிம்பு, நானும் ரெளடிதான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, வேலைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் என அவருடன் இணைந்து பணியாற்றாத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம்.
திரையுலகிற்கு பழக்கப்பட்டுப் போன கிசுகிசுகளுக்கு நயன் தாராவும் விதிவிலக்கல்ல. வல்லவன் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு உடனான காதலும் கோலிவுட் தாண்டி பேசுபொருளாகின. ஆனால் விரைவிலேயே அந்த காதல் முறிவு அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பெண், கலாசாரம் எனத் தொடர்ந்த கட்டுப்பாடுகள் அவரது சுயமான, சுதந்திர இணை தேடலைக் கூட பயாஸ்கோப் கொண்டு நோக்க ஆரம்பித்தன. பெண்ணுக்கான சுய விருப்பத்தை எப்போதும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாதது நயன்தாரா வாழ்க்கையிலும் தலையிட்டது. பராசக்தி வசனத்தைப் போல் விதியின் வலையில் அவர் மட்டும் என்ன விதிவிலக்கா?
சர்ச்சைகளுக்கு மத்தியில் உழல்வதும், அதை முறித்து எழுவதுமே நயன்தாராவின் வாழ்க்கையாகிப் போனது. நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்த நயன்தாரா அடுத்த சர்ச்சைகளுக்குள் சிக்கினார். பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் தங்களது உறவை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயரை பச்சை குத்திக் கொண்டது பேசுபொருளானது. நடிகர் பிரபுதேவாவும் தனது மண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற செய்தி தீப்பற்றிக் கொண்டது. பிரபுதேவாவை மணக்க மதமாற்றம் செய்துகொண்டார் நயன்தாரா. ஆனால் மீண்டும் அதே செய்தி சர்ச்சையாக மாறி இருவருக்கும் இடையேயான உறவு முறிவை நோக்கி சென்றது. மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளாமல் இல்லை.
நயன்தாரா பீனிக்ஸ் பறவையாவது மீண்டும் மீண்டும் நடந்தது. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின் தமிழிலிருந்து விலகியிருந்த நயன்தாரா அதன்பிறகு தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கினார். சர்ச்சை சூறாவளி அவரை அங்கேயும் விடவில்லை.
பிறப்பின் அடிப்படையில் கிறிஸ்துவரான நயன்தாராவின் நடிப்பில் உருவான ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படம் அவர் மீதான சர்ச்சைக்கு மீண்டும் புகை போட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் முறிவு கொண்டவர் எப்படி சீதை கதாபாத்திரத்தில் நடிப்பது என எழுந்தன போர்க்கொடிகள். திரை நடிப்பிற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முடிச்சுப் போட்டு குழப்பப்பட்ட இந்த சர்ச்சைகள் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
தன்னை சுற்றிய சர்ச்சைகளை ஒதுக்கித் தூர எறிந்தார் நயன்தாரா. அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். தமிழில் வெளியான யாரடி நீ மோகினி அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், நானும் ரெளடிதான், வேலைக்காரன், அறம், இமைக்கா நொடிகள், பிகில், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் என ஹிட் மேல் ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் நடிகையாக விஸ்வரூபமெடுத்தார் நடிகை நயன்தாரா.
இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான மண வாழ்க்கையில் சர்ச்சையான வாடகைத் தாய் விவகாரத்திலும் ஊர் வாயை மூட வைத்து தனது அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்ட நயன்தாரா வியந்து பார்க்கப்படும் ஆச்சர்யக்குறி.
2018 ஆம் ஆண்டு உலகின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் அட்டவணைப்படுத்திய 100 மனிதர்கள் வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்ற முதல் நடிகை எனும் பெயரை அடைந்தார் லேடி சூப்பர் ஸ்டார். ரூ. 1 கோடியை வருமானமாகப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை, நடிப்பைக் கடந்து தயாரிப்பாளராக வளர்ச்சி என எந்த சர்ச்சைகள் தன்னை சுருக்கிட நினைத்ததோ அதே சர்ச்சைகளை தனக்கு பாராட்டு பத்திரங்களாக மாற்றிக் காட்டினார் நயன்தாரா.
ஆண்களை மையப்படுத்திய தமிழ் திரையுலகில் பெண்ணாக வேருன்றி நின்றவர்கள் ஒரு சிலர். அந்த ஒரு சிலரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர் நயன்தாரா. உறவுச் சிக்கல் தொடங்கி திரைப்பயணம் வரை தனக்கு எதிராக நின்ற போது அத்தனை சிக்கல்களையும் எதிர்நீச்சலடித்து கடந்து இன்றைக்கு தனி விமானத்தில் டாட்டா காட்டுகிறார் அவர்.
“உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள். வாழ்க்கை அழகானது. இன்றைக்கு உங்களுக்கு குடும்ப பிரச்னை, தொழில் சிக்கல்கள் என பல நிறைய பிரச்னைகள் இருக்கலாம். நீங்கள் உண்மையாக உங்களது உழைப்பை செலுத்தினால் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் உங்களுக்கான நல்ல வாழ்க்கை அமையும். அதற்கு நல்ல உதாரணம் நான்தான். உலகம் ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்க்கும் பார்வை வெவ்வேறானவையாக இருக்கும். இதில் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்களது வாழ்க்கையை உங்களால் வாழ முடியாது. யாருடைய வாழ்க்கையையும் நோகடிக்காமல் அன்பாக இருங்கள்.”
நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்த மேற்சொன்ன வார்த்தைகள் இவை. அந்த வார்த்தைகளின் ஊடே உண்மையாக வாழ்ந்தவர் என்றால் அது நயன்தாராவிற்கு சாலப் பொருந்தும். பிறந்தநாள் வாழ்த்துகள் லேடி சூப்பர் ஸ்டார்.

Leave a comment