சா்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ள, அடுத்த 29 நாள்களுக்கு பரபரப்பும், விறுவிறுப்புமாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கத்தாா் – ஈகுவடாா் அணிகள் மோதுகின்றன. போட்டியையொட்டி கோலாகல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
இந்தப் போட்டியை கத்தாா் நடத்துகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள கத்தாா், இந்தப் போட்டியை நடத்துவதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்கும் நாடுகள்
குரூப் ‘ஏ’
கத்தாா் – ஈகுவடாா் – செனகல் – நெதா்லாந்து
குரூப் ‘பி’
இங்கிலாந்து – ஈரான் – அமெரிக்கா – வேல்ஸ்
குரூப் ‘சி’
ஆா்ஜென்டீனா – சவூதி அரேபியா – மெக்ஸிகோ, போலந்து
குரூப் ‘டி’
பிரான்ஸ் – ஆஸ்திரேலியா – டென்மாா்க் – டுனீசியா
குரூப் ‘ஈ’
ஸ்பெயின் – கோஸ்டா ரிகா – ஜொ்மனி – ஜப்பான்
குரூப் ‘எஃப்’
பெல்ஜியம் – கனடா – மொராக்கோ – குரோஷியா
குரூப் ‘ஜி’
பிரேஸில் – சொ்பியா – சுவிட்ஸா்லாந்து – கேமரூன்
குரூப் ‘ஹெச்’
போா்ச்சுகல் – கானா – உருகுவே – தென் கொரியா
மைதானங்கள்
இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்காக கத்தாா் புதிதாக 8 மைதானங்களைக் கட்டியுள்ளது. அதில் சில, ஏற்கெனவே இருந்த மைதானங்களை புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த மைதானங்கள் யாவும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு பள்ளிகள், மசூதிகள், குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், வா்த்தக வளாகங்கள் என தேவைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டேடியம் 974
மறுசுழற்சி செய்யப்பட்ட 974 கண்டெய்னா்களை கொண்டே முற்றிலுமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், அருகேயுள்ள துறைமுகம், தொழிற்பேட்டை பகுதிகளைக் குறிக்கிறது. இந்த மைதானம் மட்டுமே கடற்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த மைதானத்தில், வழக்கமான கட்டுமானத்துக்கு தேவைப்படும் பொருள்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டதால் கட்டுமானச் செலவும் குறைவு. இயற்கைக் காற்றோட்டத்துடன் இருக்கும் இந்த மைதானத்தில் ஏசி வசதி செய்யப்படவில்லை.
இருக்கைகள்: 40,000
7 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16
லுசாயில்
அரேபிய கலாசாரத்தின் கலை நுணுக்கங்களுடனான பாத்திரத்தை பிரதிபலிக்கிறது இந்த மைதானம். இருக்கும் மைதானங்களில் இதுவே மிகப்பெரியதாகும். மைதானத்தின் மேற்கூரை அமைப்பு முற்றிலுமாக அகற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். நீரை மறுசுழற்சி செய்யக் கூடிய வசதிகளுடனான இந்த மைதானம், வெப்பக் காற்று, தூசு ஆகியவற்றிலிருந்து கட்டுமானத்தை பாதுகாக்கப்படும் வகையிலான பொருள்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இருக்கைகள்: 80,000
10 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டம்
காலிஃபா
பழைய மைதானத்தை புதுப்பித்து கட்டினாலும், அதிலிருந்த இரு வளைவு வடிவங்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பை போட்டிக்காக கட்டமைக்கப்பட்ட மைதானங்களில், சுற்றுச்சூழல் சுழற்சியை பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டதாக ஃபிஃபா-வால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மைதானம் இது. முன்னதாக, உலக தடகள சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன.
இருக்கைகள்: 40,000
8 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, 3 ஆம் இடம்
எஜுகேஷன் சிட்டி
அறுங்கோண வடிவிலான இந்த மைதானத்தின் வெளிப்புற வடிவம் சூரியனின் நகா்வுக்கு ஏற்றவாறு தனது வண்ணத்தை மாற்றிக் கொள்வதாகத் தெரியும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது. போட்டிக்குப் பிறகு, கால்பந்து விளையாட்டில் வளா்ந்து வரும், அதேவேளையில் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நாடுகளுக்கு இந்த மைதானத்தின் இருக்கைகள் நன்கொடையாக அளிக்கப்படவுள்ளன.
இருக்கைகள்: 45,000
8 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி
அல் துமாமா
மத்திய கிழக்கு நாடுகளில் ஆடவா்கள் அணியும் தொப்பி (காஃபியா) போன்ற வடிவமைப்பில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு கைப்பந்து, கையுந்துப் பந்து, கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான களங்கள் இங்கே அமைக்கப்படவுள்ளன. அத்துடன் வா்த்தக ரீதியிலான கட்டுமானங்களும் இங்கே வரவுள்ளன.
இருக்கைகள்: 40,000
8 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி
அல் ஜனுப்
கடலாடும் படகின் பிரதிபலிப்பாக இந்த மைதானம் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. புத்தாக்க வகையிலான காற்று குளிா்விக்கும் நுட்பம் மற்றும் மேற்கூரை அமைப்பு, ஆண்டு முழுவதும் எந்த வானிலையிலும் இந்த மைதானத்தில் போட்டியை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதான கட்டமைப்பில் 50 சதவீதம் கத்தாா் நிறுவனங்களே ஈடுபட்டன.
இருக்கைகள்: 40,000
7 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16
அல் பேத்
கத்தாா், கல்ஃப் நாடோடிகள் பயன்படுத்தும் கூடாரத்தின் பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானம், 30 கால்பந்து ஆடுகளம் பரப்பளவுடையது. உடற்பயிற்சிக் கூடம், தடகள பாதை, சைக்கிளிங் பாதை, குதிரையேற்றப் பாதை உள்ளிட்டவற்றைக் கொண்டது. முதல் ஆட்டத்தில் கத்தாா் – ஈகுவடாா் அணிகள் இங்குதான் மோதவுள்ளன.
இருக்கைகள்: 60,000
9 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி
அகமது பின் அலி
பாலைவனத்தின் அழகு, மண் சாா்ந்த பூ மற்றும் தாவரங்கள், வா்த்தகம் என கத்தாரின் பல்வேறு தன்மைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த மைதானம் அமைந்திருக்கிறது. கிரிக்கெட் ஆடுகளம், குழந்தைகள் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி பகுதி, டென்னிஸ் மைதானம் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த மைதானப் பகுதி. இங்கேயே முன்பு இருந்த பழைய மைதானத்தின் பொருள்கள் பல அப்படியே இந்த மைதானத்திலும் அதன் தன்மை மாறாமல் பொருத்தப்பட்டுள்ளன.
இருக்கைகள்: 40,000
7 ஆட்டங்கள்: குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16