நான் உயிரோடு இருக்கிறேன் – உயிரிழக்கவில்லை!

பிரபல நடிகர் வேணு அரவிந்த் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலக் குறைவால் வேணு அரவிந்த் பாதிக்கப்பட்டார். அவருடைய தலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்தாகவும் பிறகு அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை சக நடிகர்கள் மறுத்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் வேணு அரவிந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இப்போது நான் உயிருடன் உள்ளேன். உற்சாகமாக இருக்கிறேஎன். எனக்கு ஏற்பட்டது பெரிய விஷயமெல்லாம் இல்லை. தலையில் சின்ன சிக்கல் ஏற்பட்டது. அதை நீக்கினார்கள். இப்போது நலமாக உள்ளேன். பிசியோதெரபி சிகிச்சையில் உள்ளேன். ஒரு நாடகத்தில் மனசாட்சி இல்லாத வில்லனாக நடித்தேன். அதன்பிறகு அதுபோல நிறைய தொடர்கள் வந்தன.
அதனால் இதனை நான் தான் ஆரம்பித்து வைத்தேனோ என்கிற குற்ற உணர்வு கூட எனக்கு உண்டு. ஒருநாள் காரில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண்மணி என்னைத் திட்டிவிட்டு மண்ணைத் தூக்கி காரில் வீசினார். இந்தச் சாபம் எல்லாம் என்னைப் பாதிக்குமோ என நான் எண்ணுவேன். அதனால் இனிமேல் நான் வில்லனாக நடிக்க மாட்டேன். தற்போதைய நிலையில் என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு நிறைய கிடைத்துள்ளது. அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.