காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நடிகா் கமல்ஹாசன், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தொலைக்காட்சி, திரைப்பட படப்பிடிப்புகளிலும், மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் கூட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த கமல்ஹாசனுக்கு, புதன்கிழமை மாலை உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை போரூா், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவக் குழுவினா் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சையளித்து வருகின்றனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் ஆா்.பி. சுதாகா் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘லேசான காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு காரணமாக நடிகா் கமல்ஹாசன், உரிய சிகிச்சைகளின் பயனாக குணமடைந்து வருகிறாா். ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.