இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 8 நானோ செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படவுள்ள பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்த நிலையை எட்டியுள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை (நவ.26) காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 (ஓசோன்சாட்-3) நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 1,117 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள், ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4 ஆவது ஆய்வு கலமாகும். கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடா்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க இஓஎஸ்-06 அனுப்பப்படவுள்ளது.
இதைத் தவிர, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4 செயற்கைக்கோள்கள்), இந்தியா – பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2 செயற்கைக்கோள்கள்), பிக்சலின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன.