50 கோடி பயனர்களின் வாட்ஸ்ஆப் தரவுகள் ஹேக்கர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அனைவரின் விருப்பமான உரையாடல் வசதியை வழங்கும் தளமாக வாட்ஸ்ஆப் செயலி உள்ளது. இந்த செயலியில் பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் அவ்வப்போது பயனர் பாதுகாப்பின்மை தொடர்பான சிக்கல்களையும் இந்த செயலி சந்தித்துள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் 50 கோடி பயனர்களின் தரவுகள் ஹேக்கர்கள் எனப்படும் இணைய குற்ற செய்பவர்களுக்கு விற்பனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர்நியூஸ் எனப்படும் அறிக்கையில் வெளிவந்த இந்த தகவலின்படி உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 48.7 கோடி வாட்ஸ் ஆப் பயனாளர்களின் அலைபேசி எண் உள்ளிட்ட உரையாடல் தரவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் வாட்ஸ்ஆப் செயலியின் தரவு மையத்திலிருந்து திருடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள இந்த அறிக்கையானது பல்வேறு தளங்களில் பதிவு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் இந்தியப் பயனர்களின் தரவுகளின் விற்பனைக்கு உள்ளாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 3.2 கோடி பயனர்கள், பிரிட்டனின் 1.1 கோடி பயனர்கள், ரஷியாவின் 1 கோடி பயனர்கள், இத்தாலியின் 3.5 கோடி பயனர்கள், செளதி அரேபியாவின் 2.9 கோடி பயனர்கள் மற்றும் இந்தியாவின் 60 லட்சம் பயனர்களின் தரவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.