‘லவ் டுடே’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
அதனால், திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் இதுவரை இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் படத்தின் ‘பச்சை இலை’ பாடல் ரசிகர்களிடம் பெரியஅளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலின் லிரிக்கல் விடியோ யூ-ட்யூபில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இப்படத்துக்கு தெலுங்கிலும் ரசிகர்ள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் டிசம்பர் 2 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.