நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2 வது டி 20 யை இந்தியா வென்றது. 3 வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1 – 0 என இந்திய அணி வென்றது.
ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றது. 2 வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
3 வது ஒருநாள் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
கிறைஸ்ட்சர்ச்சில் விளையாடிய 11 ஆட்டங்களில் 10 இல் நியூசிலாந்து வென்றுள்ளது. இலக்கை விரட்டிய அணிகள் கடைசி 3 ஆட்டங்களை வென்றுள்ளன. ஜனவரி 2019 க்குப் பிறகு நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்ததில்லை.
2 வது ஒருநாள் ஆட்டத்தில் சஞ்சய் சாம்சனுக்குப் பதிலாக தீபக் ஹூடா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவருடைய பந்துவீச்சு இந்திய அணிக்கு உதவும் என்பதால் நாளைய ஆட்டத்திலும் அவர் இடம்பெறக் கூடும். டி20, ஒருநாள் அணிகளில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்தச் சுற்றுப்பயணத்தில் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
நாளைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் நாணய சுழற்சியை வெல்லும் தலைவர் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்யக் கூடும். மழை கொஞ்சம் வழிவிட்டால் இரு அணிகளும் வெற்றிக்காகத் தீவிரமாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து தொடரை வெல்லுமா அல்லது இந்திய அணி தொடரை சமன் செய்யுமா?