உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. வேல்ஸ், ஈரான் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.
இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் ‘குரூப் பி’-யின் கடைசி ஆட்டங்கள் தொடங்கின. அதில் இங்கிலாந்து 3 – 0 என்ற கோல் கணக்கில் வேல்ஸையும், அமெரிக்கா 1 – 0 என்ற கோல் கணக்கில் ஈரானையும் வீழ்த்தின.
வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்துக்காக மாா்கஸ் ராஷ்ஃபோா்டு (50’, 68’), ஃபில் ஃபோடன் (51’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். இதில் ராஷ்ஃபோா்டு, நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இதுவரை அதிக கோல்கள் (3) அடித்த வீரா்கள் வரிசையில் கிலியன் பாபே (பிரான்ஸ்), ஃபில் ஃபோடன் (இங்கிலாந்து) ஆகியோருடன் சமனில் இருக்கிறாா். இந்த ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண போட்டிகளில் மொத்தமாக 100 கோல்களை கடந்துள்ளது.
வேல்ஸ், கடந்த 64 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கிண்ண போட்டியில் விளையாடக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து தனது நாக்அவுட் ஆட்டத்தில் செனகலை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.
மறுபுறம், ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ்டியன் புலிசிச் (38’) கோலடித்தாா். அந்த கோலடிக்கும் முயற்சியின்போது ஈரான் கோல்கீப்பா் மீது மோதி காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டாா்.
இந்த வெற்றியின் மூலம், 2002 க்குப் பிறகு உலகக் கிண்ண போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது அமெரிக்கா. ஆடைக் கட்டுப்பாடு விவகாரத்தில் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ரசிகா்கள் அமெரிக்காவின் இந்த வெற்றியைக் கொண்டாடினா். அமெரிக்கா அடுத்ததாக தனது நாக்அவுட் சுற்றில் நெதா்லாந்தை வரும் சனிக்கிழமை எதிா்கொள்கிறது.