இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த வருடத்தை விடவும் ஆபத்தான மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் உதய கம்மன்பில நேற்று (01) தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டில் பாரிய மின்வெட்டு ஏற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர், கடந்த வருடம் ஏற்பட்ட மின்சார நெருக்கடி குறித்து எச்சரித்த போதும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்காததால் நாடு பாரிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு போதிய நிலக்கரி இருப்பு இல்லை என மின்சார சபை தெரிவித்துள்ள போதிலும் டொலர் நெருக்கடியுடன் இந்த வருடம் மிகவும் ஆபத்தான மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.