திருமணம் செய்யலாம் – அதற்காக இப்படியா?
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது திருமண நிகழ்வுகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருமண நிகழ்வுடன் தற்போது நடக்கும் திருமணங்களை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. பார்க்கவும் கூடாது.
வருவாய் உயர்வு மற்றும் செலவிடும் திறன் அதிகரித்திருப்பது போன்றவை ஆடம்பர திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டன. வாழ்வில் மறக்க முடியாத தருணம்தான் திருமணம். ஆனால்.. அதற்காக இப்படியா என்று வாய்ப்பிளக்க வைக்கிறார்கள்.
இந்தியாவில், தை, மாசி போன்ற முகூர்த்த காலங்களில் 40 லட்சம் திருமணங்கள் நடக்கின்றனவாம். இதற்கு செலவிடும் தொகை ரூ.4.75 லட்சம் கோடிகளாம். இது கடந்தகாண்டு கணக்கு என்றால், இந்த ஆண்டு கணக்கை இனிதான் எண்ண வேண்டும்.
ஒரு சில நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரக் குறியீட்டுத் தொகை அளவுக்கு நம் நாட்டில் ஒரே ஒரு திருமணம் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் நமது முகத்தில் அறைந்தார் போல சொல்கின்றன.
ஒருபக்கம் திருமணத்துக்காக எவ்வளவு பெரிய தொகையையும் செலவிடத் தயாராக இருக்கும் பெற்றோரும், திருமணத்தை திட்டமிட்டு செயல்படுத்திக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.
சாதாரண எளிய மக்கள் கூட, நட்சத்திரங்களைப் போல திருமணம் செய்ய ஆசைப்படும்போருது, நட்சத்திரங்களாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள். ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை செலவாகும் என்கிறார்கள் திருமண ஏற்பாட்டாளர்கள்.
கூரைப் புடவையுடன் திருமண மக்களைப் பார்க்கவே முடிவதில்லை. அதிலும் டிசைனர் வியர் என்று வந்துவிட்டப் பிறகு ஒட்டுமொத்த மணமக்களின் குடும்பமும், யார் மணப்பெண் என்று தெரியாத அளவுக்கு வந்திறங்குகிறார்கள். இதில் மணமகளின் மேக் அப் செலவு எல்லாம் தனிக்கதை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உறவினர் திருமணத்துக்கு தனது மனைவி 25 ஆயிரம் செலவிட்டு எச்டி மேக்கப் போட்டு அதற்குண்டான மாதத் தவணையையை தான் இன்னமும் செலுத்திக்கொண்டிருப்பதாக இளைஞர் ஒருவர் பகிர்ந்த வேதனைதான் அனைத்துக்குமான ஒரே சாட்சி.
ஏன் வெளிநாடு செல்கிறார்கள்?
இந்தியாவில் மிகப் பிரம்மாண்ட திருமணத்தை நடத்த ஒரு கோடி செலவாகும் என்றால், அதனை தாய்லாந்து போன்ற நாடுகளில் நடத்தினால் செலவும் அதே அளவில் இருக்க, பிரம்மாண்டம் வேற லெவலில் இருக்கும் என்பதால் வெளிநாடு பறக்கிறார்கள் என்று திருமண சேவை அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஒரு 200 பேர் பங்கேற்கும் திருமணத்தை நான்கு நட்சத்திர விடுதியில் நடத்த ரூ.80 – 90 லட்சம் செலவாகும் என்றதால், அதை தாய்லாந்தில் செய்ய வேண்டும் என்றால் ரூ.1.20 கோடிதான் ஆகுமாம். ஆனால் திருமணம் நட்சத்திரங்களின் திருமண வைபவம் போல இருக்குமாம்.
மோடி என்ன சொல்கிறார்?
இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
நவம்பர் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்கிறார்கள். இதனால் மிகப்பெரிய தொகை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. இது இந்தியாவில் செலவிடப்பட்டால் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பது அவரது கருத்து.
சரி இந்தியாவிலேயே திருமணம் செய்யலாம் என்றால், எந்நெந்த இடங்கள் சரியானதாக இருக்கும் என்று பார்த்தால், கோவல, ராஜஸ்தான், ஹிமாச்சல், அந்தமான் போன்றவை மிகச் சிறந்த தருணங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.