ரஜினிக்கு விஜய் போட்டி?
நடிகர் ரஜினிகாந்த் தனது முந்தைய படமான ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குட்டி கதையான ‘காக்கா-கழுகு’ கதை விஜயைக் குறிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி தற்போது பேசியுள்ளார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜன.26-ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காக்கா- கழுகு கதை நான் விஜயைக் குறிப்பிட்ட மாதிரி சமூக ஊடகங்களில் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அது வருத்தமாக இருந்தது. விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன்.
“தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருக்கும்போது விஜய்க்கு 13-14 வயதிருக்கும். அப்போது சந்திரசேகர் எனது பையன் என என்னிடம் அறிமுகப்படுத்தினார். நடிப்பில் ஆர்வம் இருக்கிறது எனச் சொன்னார். அதன் பிறகு அவர் நடிக்க வந்து படிப்படியாக தனது திறமை, உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். மறுபடி இப்போது அவர் சமூக சேவைக்கு போவதாக கேள்விப்பட்டேன்.
“இந்த நிலையில் எனக்கு போட்டி என சொல்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. விஜயே சொன்னது போல அவர் படத்துக்கு அவர்தான் போட்டி.
“விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை. எனக்கு கெளரவம் இல்ல. விஜய் என்னை போட்டின்னு நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்கள் இந்த விவாதத்தை தவிர்த்துவிடுங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.