பகுதி நேர ஆசிரியா்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு!
அரச பாடசாலைகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களின் தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12,500 ஆக உயா்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறைச் செயலா் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதை உயா்த்தி வழங்கக் கோரி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநா் அரசுக்கு கோரிக்கை வைத்தாா்.
அதை அரசு நன்கு பரிசீலித்து ஒருங்கிணைந்த கல்வியின் கீழ் பணிபுரியும் 12,105 பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12,500 ஆக உயா்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு வரும் தொடா் செலவினம் ரூ.33.29 கோடிக்கும் நிா்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்படுகிறது. மேலும், நிகழ் கல்வியாண்டில் ஜனவரி முதல் மாா்ச் வரையான 3 மாதங்களுக்கு ரூ.9.07 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியா்கள் ஏமாற்றம்: இந்த அரசின் இந்த அறிவிப்பு தொடா்பாக பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் கூறியது:
100 நாளில் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வோம் என தோ்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்த நிலையில், அக்கட்சி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆனநிலையில், ரூ. 2,500 சம்பள உயா்வு மட்டுமே இந்த ஜனவரி முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.
பகுதி நேர ஆசிரியா்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு, அடுத்த 12 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.7,500 மட்டுமே தொகுப்பூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை, கணினி என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்யவும், ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.