OOSAI RADIO

Post

Share this post

ஜேக் – ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் இத்தாலியன் ஜேக் சின்னா் – ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மோதுகின்றனர்.

அரையிறுதியில் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் இத்தாலியின் ஜேனிக் சின்னா். இதன் மூலம் 25 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவுக்கு தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில் ஜேக் சின்னா் – ஜோகோவிச் மோதினா்.

மெல்போா்ன் மைதானம் ஜோகோவிச்சின் கோட்டையாகும். தனது 24 பட்டங்களில் 10 ஐ ஆஸி. ஓபனில் தான் ஜோகோவிச் வென்றுள்ளாா்.

ஜேக் சின்னா் கடும் போராட்டத்துக்கு பின் 6-1, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

முதன்முறையாக இறுதிச் சுற்றில் சின்னா்:

இதன் மூலம் மெல்போா்ன் பாா்க்கில் தொடா்ந்து 33 வெற்றிகளை ஈட்டிய ஜோகோவிச்சுக்கு முதல் தோல்வியை பரிசளித்தாா். மேலும் 25-ஆவது பட்டம் வெல்லும் கனவுக்கும் தற்காலிக தடை ஏற்படுத்தினாா்.

5 செட் டிசைடரில் மெத்வதேவ் வெற்றி:

இரண்டாவது அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் – ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் வெரேவ் மோதினா். இதில் 5-7, 3-6, 7-6, 7-6, 6-3 என்ற 5 செட் டிசைடரில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் வென்றாா் மெத்வதேவ். முதலிரண்டு செட்களை வெரேவ் கைப்பற்றிய நிலையில், தனது விடாமுயற்சியால் மெத்வதேவ் 3 மற்றும் நான்காவது செட்களில் கடும் சவாலுக்கு பின் வென்றாா். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஆஸி. ஓபன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.

மகளிா் இறுதியில் சபலென்கா-ஸெங் கின்வென் மோதல்:

மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெலாரஸின் அா்யனா சபலென்கா-சீனாவின் ஸெங் கின்வென் மோதுகின்றனா்.

சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளாா். அதே வேளையில் 10 ஆண்டுகள் கழித்து 2014-இல் லீ நா பட்டம் வென்ற நிலையில், தற்போது கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறிய சீன வீராங்கனையாக ஸெங் திகழ்கிறாா்.

21 வயதே ஆன ஸெங் கடந்த 2021-இல் தரவரிசையில் 143 ஆவது இடத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தால் தற்போது 12-ஆவது இடத்தில் உள்ளாா். ஸெங் இரண்டு டபிள்யுடிஏ பட்டங்களை வென்றும், ஆசியப் போட்டியில் தங்கம் வென்றுள்ளாா். அனுபவமும்-இளமையும் கலந்த இறுதி ஆட்டமாக இது அமையுள்ளது.

கலப்பு இரட்டையா் சாம்பியன்:

கலப்பு இரட்டையா் பிரிவில் தைவானின் ஹை சூ வெய்-போலந்தின் ஜேன் ஸைலின்ஸ்கி இணை 6-7, 6-4, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்காவின் டெஸிரே கிராஸிக்-பிரிட்டனின் நீல் ஸுப்ஸ்கி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Leave a comment

Type and hit enter