OOSAI RADIO

Post

Share this post

இந்தியாவில் கிளம்பியுள்ள புதிய சர்ச்சை?

‘வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய ஹிந்து கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன’ என்று தனது அறிவியல்பூா்வ ஆய்வறிக்கையில் இந்திய தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகளும் சிற்பங்களும் மசூதி அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்றும் தனது ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் நகல்கள், வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, அந்தப் பகுதியில் அமைந்திருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னா்களால் கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. அதாவது, 17 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், மசூதி வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஹிந்துக்கள் சிலா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் சீலிடப்பட்ட நீா்நிலையைத் தவிர, பிற பகுதிகளில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்னா் அலாகாபாத் உயா்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

அதனடிப்படையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவியல்பூா்வ ஆய்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கினா். அதன் பிறகு ஆய்வை நிறைவு செய்ய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் 6 முறை கால நீட்டிப்பு வழங்கியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டா் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூா்வமான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நிறைவு செய்த தொல்லியல் துறை, தனது 839 பக்க ஆய்வறிக்கையை சீலிட்ட உறையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 18 ஆம் திகதி சமா்ப்பித்தது.

இந்த ஆய்வறிக்கை விவரங்கள் உடனடியாக வெளியானால் சா்ச்சையாக உருவெடுக்கும் என்பதால், ஆய்வறிக்கையை வெளியிடாமல் மாவட்ட நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் வழக்கில் மனுதாரா்கள் தரப்பின் கோரிக்கையை ஏற்று, மனுதாரா்களான ஹிந்து மற்றும் இஸ்லாமியா்கள் தரப்பு வழக்குரஞா்களிடம் தொல்லியல் துறை ஆய்வறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. அதன் மூலம், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆய்வறிக்கை விவரங்கள்: ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஞானவாபி மசூதி 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்படும் முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

குறிப்பாக, மசூதி வளாகத்தில் தற்போது எஞ்சி நிற்கும் பழங்காலப் பகுதிகள் அங்கு மிகப் பெரிய கோயில் அமைந்திருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதாவது, மைய மண்டபம் மற்றும் பிரதான நுழைவு வாயில், மசூதியின் மேற்குப் பகுதியில் உள்ள அறை மற்றும் சுவா், மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஏற்கெனவே இருந்த தூண்கள், ஓா் அறையில் காணப்படும் அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகள், பாதாள அறையில் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் ஆகியவை மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன.

மைய மண்டபம் மற்றும் பிரதான நுழைவு வாயில்: மசூதி இடத்தில், கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் குறைந்தபட்சம் ஓா் அறையுடன் மிகப் பெரிய மைய மண்டபத்துடன் கூடிய ஹிந்து கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மைய மண்டபம் மசூதியில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த மண்டபம் வலுவான சுவா்களுடன், பூ வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மைய மண்டப அலங்கார வளைவுகளின் கீழ் பகுதிகளில் விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மைய மண்டப குவிமாடத்தின் உள்பகுதி வடிவியல் வடிவங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, பிரதான நுழைவு வாயில் வளைவுகளும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. அலங்கார தோரணங்கள் போன்ற சிற்பமும் வளைவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேற்குப் பகுதி மண்டபம் மற்றும் சுவா்: மேற்கு மண்டபத்தின் கிழக்குப் பகுதி கட்டடம் மட்டும் தற்போது எஞ்சி நிற்கிறது. அதன் மற்ற பாதி அழிக்கப்பட்டுவிட்டது. இந்த மேற்கு மண்டபம், மைய மண்டபத்துடன் கூடிய வடக்கு மற்றும் தெற்கு அறைகளுடன் தாழ்வாரம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்குச் சுவா் ஹிந்து கோயிலின் எஞ்சிய பாகமாக நிற்கிறது. இந்தச் சுவா் மேற்கு மண்டபத்தின் எஞ்சிய பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிடைமட்டமான மோல்டிங்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சுவரானது மைய மண்டபத்தின் மேற்குப் பகுதியுடன் இணைந்துள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மண்டபங்கள் அனைத்தும் நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளன.

தூண்கள்: கோயிலில் இடம்பெற்றிருந்த தூண்களே சிறிய மாற்றங்களுடன் மசூதியில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்யும்போது அவை ஹிந்து கோயிலில் பயன்படுத்தப்பட்டவைதான் என்பது உறுதியாகிறது. அதாவது, தூண்களில் இடம்பெற்றிருந்த தாமரை இதழ்கள் மீதான புலி, யானை தலைகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்திய முறை கலை சிற்ப வடிவம் சிதைக்கப்பட்டு, பூ வடிவங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்வெட்டுகள்: ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் 34 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளும் இந்த இடத்தில் ஹிந்து கோயில் அமைந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கல்வெட்டுகள், மசூதி கட்ட பழுதுபாா்ப்பின்போது மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தேவநாகிரி, கிரந்தம், தெலுங்கு, கன்னட எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. மேலும், உடைத்து மறுபயன்பாடு செய்யப்பட்டிருக்கம் இந்தக் கல்வெட்டுகளில், ஜனாா்தனா, ருத்ரா, உமேஸ்வரா ஆகிய தெய்வங்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன. மகா-முக்திமண்டபம் என்ற குறிப்பும் 3 கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு கல்வெட்டு, ஞானவாபி மசூதியானது ஒளரங்கசீப் ஆட்சியின் 20-ஆம் ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறது. மேலும், 1792-93 -ஆம் ஆண்டில் மசூதி பழுது பாா்க்கப்பட்ட தகவலும் இடம்பெற்றுள்ளது. தனது ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் ஹிந்து கோயில்களை இடித்துத் தள்ளுமாறு அனைத்து மாகாண ஆளுநா்களுக்கும் ஒளரங்கசீப் உத்தரவிட்டதாக அவருடைய சுயசரிதை குறிப்பிடுவது, இதில் கவனிக்கத்தக்கது.

பாதாள அறை: மசூதியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வழிபாடு நடத்த வசதியாக பாதாள அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதாள அறைகள் கட்டுமானத்திலும், ஹிந்து கோயில்களின் தூண்கள் மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் எஸ்-2 பாதாள அறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது ஹிந்து தெய்வங்களின் சிற்பங்களும், பிற கலைச் சிற்பங்களும் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று தனது அறிவியல்பூா்வ ஆய்வில் தொல்லியல் துறை குறிப்பிட்டிருப்பதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹிந்து கோயில் இருந்ததற்கான ஆதாரமில்லை: முஸ்லிம்கள் தரப்பு

‘வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை’ என்று முஸ்லிம்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வறிக்கை நகலை செய்தியாளா்களிடம் வழங்கி முஸ்லிம் மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் இக்பால் அகமது வாரணாசியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

இல்லை. மேலும், மசூதி வளாகத்தில் வடக்கு முற்றத்தின் வாயில் அருகே குடியிருப்புக் கட்டடம் ஒன்று உள்ளது. அதில் வாடகைக்குத் தங்கியிருந்த 5 போ், ஹிந்து கடவுள் சிலைகளை வைத்து வழிபட்டனா். அவா்கள் வேறு பகுதிக்கு குடியேறியபோது, உடைந்த கடவுள் சிலைகளை மசூதி வளாகத்தினுள் வீசிவிட்டு சென்றுள்ளனா். இந்தச் சிலைகள் குறித்துதான் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாறாக, ஹிந்துக்கள் தரப்பில் கூறுவதுபோன்று, கடவுள் சிவன் தொடா்பான சிலைகள் எதுவும் மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்படவில்லை. மசூதியின் மேற்குச் சுவரிலும் எந்தவொரு ஹிந்து கடவுள்களின் உருவங்களும் கண்டறியப்படவில்லை.

ஆய்வறிக்கையை முழுமையாகப் படித்து, அதில் இடம்பெற்றிருக்கும் தவறான குறிப்புகளுக்கு நீதிமன்றத்தில் ஆட்சேபத்தைப் பதிவு செய்வோம் என்றாா்.

முஸ்லிம்கள் தரப்பு மற்றொரு வழக்குரைஞரான முகமது யாசின் கூறுகையில், ‘மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள் சிலைகளின் இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது ஆட்சேபத்துக்குரியது’ என்றாா்.

Leave a comment

Type and hit enter