போலி மரண நாடகம் – 100 கோடி அவதூறு வழக்கு!
பிக்பாஸ் பிரபலமும், பிரபல மாடல் நடிகையுமான பூனம் பாண்டே, கடந்த 2 ஆம் திகதி கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக் இறந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியானது. அதனை பூனம் பாண்டேயின் மேலாளரும் உறுதிபடுத்தினார்.
ஆனால் அடுத்த நாளே, `தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை புற்று நோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இது போன்று நடந்து கொண்டதாகவும்’ பூனம் பாண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தது. தற்போது கான்பூரில் பூனம் பாண்டேயிக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூர் போலீஸ் கமிஷனரிடம் ஃபைசன் அன்சாரி என்பவர் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
அதன் பேரில் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்சாரி தனது புகாரில் இரண்டு பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து அவர்களை கான்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையில், ”பூனம் பாண்டேயும் அவரின் கணவர் சாம் பாம்பேயும் சேர்ந்து போலி இறப்புக்கு சதி செய்துள்ளனர். பூனம் தனது சொந்த விளம்பரத்திற்கு இது போன்ற ஒரு விளையாட்டை நடத்தி இருக்கிறார். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த பாலிவுட்டோடு பூனம் பாண்டே விளையாடி இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பூனம் பாண்டேயிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பூனம் பாண்டே போலி மரண நாடகம் நடத்திய பிறகு கர்ப்பப்பை புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்கு விளம்பரத்தூதரகாக இருக்க விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரை விளம்பர தூதரகாக நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.