வன்முறைக் காட்சிகள் வேண்டாம் – ரஜினி அதிரடி அறிவிப்பு!
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.
தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் ரஜினியின் இளவயது காட்சிகளை உருவாக்க படக்குழு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலேயே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால், இறுதியில் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்திடம் இப்படத்திற்கான கதையை லோகேஷ் கனகராஜ் சொன்னதாகவும் ஆனால், கதையில் மாற்ற செய்ய வேண்டும் என ரஜினி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, அதிக வன்முறை, போதைப்பொருள் காட்சிகள் இடம் பெறாததுபோல் கதையை எழுதச் சொல்லியிருக்கிறாராம்!