பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக PAD வழங்க நடவடிக்கை!
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார்.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான பழக்க வழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவது சவாலானது என்று தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர் வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடினமான, மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான அமைச்சரவைப் பத்திரங்கள் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும், வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1,200 ரூபாய் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை பலப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.