8 ஆம் திகதி மதியம் 2.12 மணிக்கு…
உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது.
இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணம் 8 ஆம் திகதி மதியம் 2.12 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் (9) அதிகாலை 2.22 வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது நிழல் படும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
இதன் போது, சூரியனின் ஒளியை நிலவு பூமியின் சில பகுதிகளில் விழுவதைத் தடுக்கிறது. இதனால், முழு சூரிய கிரகணத்தின் போது சிலப் பகுதிகளில் சூரிய ஒளிபடாமல் அடர்ந்த இருட்டு ஏற்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி தென்படவுள்ள முழு சூரிய கிரகண நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் உணவு மற்றும் எரிவாயுவை சேமித்து வைக்குமாறு அதிகாரிகள் உள்ளூர் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அறிவியல் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் முழு சூரிய கிரகணத்தை காண தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில், முழு கிரகணத்தைப் பார்க்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், சிறப்பு கிரகண கண்ணாடிகளை அணியுமாறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மக்களை எச்சரித்து வருகின்றன.
கேமரா லென்ஸ் அல்லது தொலைநோக்கி மூலம் சூரியனை நேரடியாகப் பார்ப்பதால் குருட்டுத்தன்மை அல்லது பார்வைக் குறைபாடு ஏற்படலாம் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
அடுத்த முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12, 2026 அன்று தென்படவுள்ளது. இது கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.