அதிக ஓட்டங்களை சேஸ் செய்து சாதனை
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்று (19) நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்று அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 பெற்றார். அடுத்து வந்த ரோசோ சிறப்பாக ஆடி 49 ஓட்டங்களை பெற்று அவுட் ஆனார். இவருடன் ஆடிய சஷாங்க் சிங் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ஓட்டங்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 35 ஓட்டங்களை அடித்தார்.
துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஐதராபாத் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐதராபாத் அணி இதுவரை தான் சேசிங் செய்ததில் அதிக ஓட்டங்களை சேசிங் செய்துள்ளது.