8 வயது சிறுமி பலாத்காரம் – 13 வயது சிறுவர்கள் வெறிச்செயல்!
![](https://oosai.lk/wp-content/uploads/2024/07/aandra-586x365.jpg)
8 வயது சிறுமியை 13 வயதே ஆன மூன்று சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கொலையும் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் முச்சுமரி கிராமத்தை சேர்ந்த 8 வயது மாணவி ஒருவர், வீட்டருகே உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி கடந்த ஞாயிறு அன்று அதே ஊரில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்தார். மாணவி படிக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் பூங்காவிற்கு வர, அவர்களுடன் சேர்ந்து மாணவி விளையாடி இருக்கிறார்.
விளையாட்டில் ஆர்வமாக இருந்த அந்த மாணவியை ஓடிப் பிடித்து விளையாடலாம் என்று கூறி கிராமத்திற்கு வெளியில் அந்த சிறுவர்கள் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்த மாணவியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று பேரும், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 13 வயதே ஆன மூன்று சிறுவர்களும் அதோடு நிறுத்தாமல், அந்த சிறுமியை கொலை செய்து, உடலை அருகே இருந்த கால்வாய்க்குள் வீசிவிட்டு சென்று விட்டனர்.
மகளை காணாமல் தவித்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் அளிக்க, அவர்களும் பல இடங்களில் தேடி சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மோப்பநாய் உதவியுடன் மாணவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சிறுமி கடைசியாக விளையாடிய பூங்காவிற்கு நாயுடன் சென்ற போலீசார், தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியின் ஆடைகளை சரியாக மோப்பம் பிடித்த போலீஸ் நாய், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மாணவர்களின் வீடுகளுக்கு முன்பாக சென்று படுத்துக் கொண்டது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டில் இருந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரிக்க, சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் கிராமத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க, அங்கே உடல் அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது.
கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று சிறுவர்களையும் பிடித்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 8 வயது சிறுமியை 13 வயதே ஆன மூன்று சிறுவர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.